“ஈரோடு கிழக்கில் பாஜக தனித்துப் போட்டியா… இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும்!" – கே.பி.ராமலிங்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் ஆலோசனைக்கூட்டம், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்து தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜ.க-வின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடிக்க முழுமையாகப் பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் கருத்துகளை அறிந்து, எந்த வகையில் தி.மு.க கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிப்பது என்பது குறித்து வியூகம் அமைப்பதற்காக இந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு கட்சியின் மாநிலத் தலைமைக்கு தெரிவிப்போம். அதனடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம்.  

நிர்வாகிகள் கூட்டம்

இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு தோற்கடிக்கப்படாவிட்டால் தி.மு.க-வின் அராஜகமான, குடும்ப ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுபோல ஆகிவிடும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுமா என்பதை அறிந்துகொள்ள தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என அ.தி.மு.க-வின் எந்த அணியை ஆதரிப்பது, தனித்துப் போட்டியா இல்லையா என்பதை இன்னும் இரண்டு நாள்களில் முடிவுசெய்து எங்களின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார். ஜனவரி 31-ல் இருந்துதான் வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதால் இது குறித்து முடிவு செய்ய காலஅவகாசம் இருக்கிறது.

கே.பி.ராமலிங்கம்

அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தப்பட்டது. அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது. எங்களைப் பொறுத்தவரை இரண்டு அணிகளும் ஒன்றுசேர வேண்டும் என்பதையே விரும்புகிறோம். தி.மு.க-வை தோல்வியுறச் செய்வதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்ப்பதற்கான வியூகத்தை நாங்கள் ஏற்படுத்திவருகிறோம். அ.தி.மு.க பல அணிகளாகப் பிரிந்து கிடக்கும் நிலையில், அவர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய நாங்கள் விரும்பவில்லை.

நிர்வாகிகள் கூட்டம்

அந்தக் கட்சியின் உள் விவகாரங்களில் பா.ஜ.க தலையிடாது.  
இந்தத் தேர்தலில் தி.மு.க அணி தோற்கடிக்கப்பட வேண்டு்ம் என்பதே எங்கள் வியூகம். அதைநோக்கியே எங்கள் பயணம் இருக்கும்” என்றார். பேட்டியின்போது மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.