டில்லி நட்சத்திர ஹோட்டலில் ரூ.23 லட்சம் பில் கட்டாமல் எஸ்கேப் ஆனவர் கைது| Man Who Fled Delhi 5-Star Hotel Leaving ₹ 23 Lakh Bill Arrested

புதுடில்லி: புதுடில்லியில், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அதிகாரி என பொய் சொல்லி நான்கு மாதம் தங்கி, ‘பில்’ தொகையான 23 லட்சம் ரூபாயை செலுத்தாமல் கம்பி நீட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுடில்லியில், பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ல் வந்த மொகம்மத் ஷரீப் என்பவர், ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபியில் இருந்து வருவதாகவும், அபுதாபி அரச குடும்பத்தினரிடம் முக்கிய பதவியில் இருப்பதாக கூறியுள்ளார்.

தன் பிஸினஸ் அட்டை, அந்நாட்டு குடியுரிமை அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்த அவர், இந்தியாவுக்கு அலுவல் ரீதியாக வந்ததாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, அவருக்கு இந்த ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலில் உல்லாசமாக தங்கிய மொகம்மத் ஷரீப், நவ., 20ல் அறையை காலி செய்துள்ளார். நான்கு மாதம் ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணமாக 35 லட்சம் ரூபாய் வந்துள்ளது. ஆனால், இவர் 11.5 லட்சம் ரூபாய் மட்டுமே செலுத்தி இருந்தார். மீதி தொகைக்கு நவ., 20ம் தேதியிட்ட காசோலை கொடுத்தார். ஆனால், இது வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பியுள்ளது.

மேலும், இவர் ஹோட்டலில் இருந்து கிளம்பிய போது, அறையில் இருந்த வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் திருடிச் சென்றுவிட்டார். இது குறித்து ஹோட்டல் நிர்வாகம் புகார் அளித்தது. புதுடில்லி போலீசார் வழக்குப் பதிந்து, அவர் ஹோட்டலில் அளித்திருந்த ஆவணங்களை சோதனையிட்டனர்.

அவை, அனைத்தும் போலியானவை என தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர். அவர் மீது ஐபிசி 419/420/380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், அவர் கர்நாடகாவின் தக்ஷின் கன்னடா பகுதியை சேர்ந்த மொகம்மத் ஷரீப் என்பது தெரியவந்தது. அவரை கர்நாடகாவில் போலீசார் கைது செய்து டில்லி அழைத்து வந்து பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.