தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், குமரி கடலில் பக்தர்கள் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் நேற்று பக்தர்கள் புனித நீராடினர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் சுவாமி – அம்பாள் சன்னதியில் கால பூஜை நடைபெற்றது. இதற்கிடையே அதிகாலை 5 மணி முதல் அக்னி தீர்த்தக்கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்னகளுக்கு தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர். அமாவாசையை முன்னிட்டு பகல் 12 மணிக்கு ராமர், சீதாதேவி கருட வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு மேல் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், ராமர், சீதாதேவி பஞ்ச மூர்த்திகளுடன் நான்குரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கன்னியாகுமரி: தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்தனர். அதன்பின் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பகவதி அம்மன் கோயிலில் இரவு 10 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி, வருடத்தில் ஐந்து முறை மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி:திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் குவிந்து நீர்நிலைகளில் பூஜைகள் செய்து, பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு, நாகப்பட்டினம் புதியகடற்கரை, வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை, மயிலாடுதுறை துலாகட்டம், அறந்தாங்கி அருகே மணமேல்குடி கோடியக்கரை ஆகிய நீர்நிலைகளிலும் மக்கள் புனித நீராடினர்.

சதுரகிரி கோயிலில்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குவிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து அஸ்திரதேவர் எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது.

* பூஜைக்கு வந்த 3 பேர் சாவு
நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன்(60). இவர் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவே கன்னியாகுமரிக்கு வந்தார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் முக்கடல் சங்கமம் பகுதியில் கடலில் நீராட இறங்கியபோது, படித்தரையில் கால் வழுக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.  இதேபோல சதுரகிரிக்கு தரிசனம் செய்ய வந்த 2 பக்தர்கள் திடீரென மரணம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.