புதுச்சேரியில் 10,500 காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒப்புதல்: பாஜக தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் 10,500 காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா சிறப்பு அழைப்பாளராக இதில் கலந்து கொண்டார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜே சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அணுகியதை அடுத்து, தற்போது 10,500 பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்காக புதுச்சேரிக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 80 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. ஏஎப்டி, சுதேசி மற்றும் பாரதி மில்கள் கடந்த கால ஆட்சியில் மூடப்பட்டு பணிபுரிந்தோருக்கு தரப்படாமல் இருந்த நிலுவைத்தொகை ரூ.120 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

கரசூரில் உள்ள 800 ஏக்கர் நிலத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தொழில் முனைவோருக்கு ஒதுக்கி தொழிற்சாலைகள் கொண்டு வர அனுமதி அளித்துள்ளது. புதுவை மாநில பட்ஜெட் தொகைக்கு கூடுதலாக ரூ1400 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது பாகம் வரும் ஏப்ரல் மாதம் ஒலிபரப்பாக உள்ளது. இதனை புதுவையின் 959 கிளைகளில் ஒலிபரப்பு செய்ய கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதுடன் இதன் மூலம் கட்சி அமைப்பு பலம் பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிரதமர் மோடியை அரசியல் ரீதியாகவோ, நிர்வாக ரீதியாகவோ எதிர்கொள்ள திறனில்லாத எதிர்க்கட்சிகள், அவருக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை செய்து மக்கள் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.