மகளிர் ஐபிஎல் அணிகள் ஏலம் தொழில் நிறுவனங்கள் ஆர்வம்

மும்பை: மகளிர் ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்க உள்ள அணிகளின் உரிமத்தை ஏலம் எடுக்க 5 ஐபிஎல் அணிகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பிரபல தொழில் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. உலக அளவில் ஐபிஎல் டி20 தொடர் பிரபலமாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் டி20 போட்டிகளை(டபுள்யூ.ஐபிஎல்)  நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மார்ச் 3-26 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன.  இந்த அணிகளை வாங்க ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் 5 பேர் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் ‘எஸ்ஏ20’ தொடரில் விளையாடும் 6 அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.

அதனால் அவர்களே  டபுள்யூ.ஐபிஎல் அணிகளையும் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், புதிதாக சில பிரபல தொழில் நிறுவனங்களும் ஆர்வமாக  விண்ணப்பங்களை வாங்கியுள்ளன. கடைசி நாளான நேற்று மாலை வரை சுமார் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் கணிசமாக உள்ளன.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும்  செட்டி நாடு,  ஸ்ரீராம்,  நீலகிரி குழுமங்கள் விண்ணப்பங்களை வாங்கி உள்ளன. இவை தவிர ஐபிஎல் அணி நிர்வாகங்களும்  விண்ணப்பிக்கத் தயாராக உள்ளன. செட்டி நாடு சிமென்ட் நிறுவனம்போல் ஜேகே சிமென்ட் நிறுவனம்  தயாராகி உள்ளது. அமீரகம் உள்பட வெளிநாடுகளில் டி20 அணிகளை வைத்திருக்கும் தொழில் நிறுவனங்களும் களமிறங்கி உள்ளன.

அதானி குழுமம், ஜிஎம்ஆர்,  ஜேஎஸ்டபுள்யூ,  காப்ரி குளோபல் ஆகிய பெரிய நிறுவனங்களுடன் நாக்பூரில் புகழ்பெற்ற இனிப்பு விற்பனை நிறுவனமான  ‘ஹால்டிராம்’   நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.5 லட்சம், ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனம் கையாளும் சொத்தின் மதிப்பு ரூ.1000 கோடிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஐபிஎல் போட்டிகளை 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமத்தை, வயாகாம் 18 நிறுவனம் ரூ.951கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அணிகள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஏலங்கள்  அடுத்த மாதம் நடைபெற உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.