பெண்கள் உரிமை பெற எக்காலத்திலும் தாய்மை உணர்வை விட்டுவிடக் கூடாது – பாரதியாரின் எள்ளுப்பேரன் பேச்சு

மதுரை: மதுரை பாத்திமா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில், முத்தமிழ் விழா நடந்தது. உதவி பேராசிரியை அருள் மைக்கேல் செல்வி வரவேற்றார். இதையொட்டி கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடந்தன. மதுரை மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் வரதராசன் சிறப்புரையாற்றினார். கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கல்லூரிகளுக்கு இடையிலான கலை போட்டியில் லேடி டோக் கல்லூரி முதலிடமும், தியாகராசர் கல்லூரி 2வது இடமும் பிடித்தன. தமிழ்த்துறை உதவி பேராசிரியைகள் ஏஞ்சல், சுஜா தொகுத்து வழங்கினர். ஆய்வு மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறினார். இரண்டாம் நாள் விழாவையொட்டி, முத்தமிழ் விழா மலர் ‘பொதும்பர் படைப்பு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாரதியாரின் எள்ளுப்பேரன் கவிஞர் நிரஞ்சன் பாரதி, புதுமைப் பெண் 2.0 என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது: மதுரை தொன்மையான தமிழ் நகரமாய்த் திகழ்கிறது. பற்பல கவிஞர்களை குறிப்பாக பெண் கவிஞர்களை அங்கீகரித்த தமிழ்ப்பலகை மதுரையில் இருந்தது. பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்தவர் பாரதியார். அவரது வெற்றி வாழ்க்கையில் நான்கு பெண்களின் பங்களிப்பு இருந்தது. பாரத தேவி, பராசக்தி, சகோதரி நிவேதிதா தேவி, செல்லம்மாள் ஆகியோர் முக்கிய இடம் வகித்தனர். பாரதியின் வாழ்க்கையில் நிவேதிதா தேவியின் பங்களிப்பு இருந்தது. பெண் விடுதலை இன்றி இந்த நாட்டில் மண் விடுதலை இல்லை.

நான் செல்லம்மாள் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுத இருக்கிறேன். பெண்கள் தங்களது உரிமையை பெற எக்காலத்திலும் தங்களிடம் உள்ள தாய்மை உணர்வை விட்டுவிடக்கூடாது. இதுவே பெண்களுக்கு கேடயம். மூடநம்பிக்கையை தவிர்த்து, தெய்வ நம்பிக்கையோடு செயல் படவேண்டும்” என்றார்.

தொடர்ந்து கல்லூரியின் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிலப்பதிகாரத்தை மையப்படுத்தி நாட்டிய நாடகம், தமிழர் பண்பாட்டை விளக்கும் விதத்தில் இசைப்பாடல், பரதம், கரகம், ஒயில், மான்கொம்பு, கழியல், பறையாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.