மாநில பள்ளி, கல்லூரி கைப்பந்து போட்டி இன்று தொடக்கம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ஆகிய இரு இடங்களில் நடக்கிறது.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஏறக்குறைய 100 அணிகள் பங்கேற்கின்றன. இதில் சென்னை எத்திராஜ், வேல்ஸ், எஸ்.ஆர்.எம்., டி.ஜி.வைஷ்ணவா, பி.கே.ஆர். (ஈரோடு), ஜமால் முகமது (திருச்சி), சரஸ்வதி தியாகராஜா (பொள்ளாச்சி) உள்ளிட்ட கல்லூரி அணிகளும், சென்னை டான்போஸ்கோ, செயின்ட் பீட்ஸ், வேலுடையார் (திருவாரூர்), பாரதியார் மெட்ரிக். (சேலம் ஆத்தூர்), போப் (சாயர்புரம்), அரசு மேல்நிலைப்பள்ளி ( ஈரோடு) உள்ளிட்ட பள்ளிகளும் அடங்கும். மொத்தம் 1,200 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.

போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக அளிக்கப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுக்கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 4 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.