வரி செலுத்தாத ’டாப் 100’ பேரின் பட்டியல்: கோவை மாநகராட்சியில் அதிரடி சம்பவம்!

கோவை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி என பல்வேறு வரிகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 100 வார்டுகள் இருக்கின்றன. அதில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 611 சொத்து வரிதாரர்கள் இருக்கின்றனர்.

நிதியாண்டு நிறைவு

நடப்பு 2022 – 23ஆம் நிதியாண்டு வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சொத்து வரியாக 344 கோடி ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 197 கோடி ரூபாய் மட்டும் வசூலாகியுள்ளது. இதை கணக்கிட்டு பார்க்கையில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே வரி வசூலானது தெரியவந்துள்ளது. இது மாநகராட்சியின் செயல்பாடுகளில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

மாநகராட்சி ஆணையர் உத்தரவு

எனவே வரிதாரர்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வசூலில் ஈடுபட மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை வேளையில் 7 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 4 மணிக்கு மேலாகவும் ஊழியர்கள் வரி வசூல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் வரி வசூலிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அலட்சியம் காட்டும் மக்கள்

இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வரி செலுத்துவதில் அலட்சியப் போக்கு காணப்படுகிறது. சொத்து வரி தவிர தொழில் வரி, குடிநீர் கட்டணம் என கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது. இத்தகைய போக்கு வளர்ச்சி திட்டங்களை முடக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே மக்கள் தாமாக முன்வந்து வரி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

இதுதொடர்பாக முக்கிய இடங்களில் அறிவிப்புகள் வாயிலாக விழிப்புணர்வும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. வரி செலுத்தாத நபர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அதிக தொகை செலுத்தாத முதல் 100 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

டாப் 100 பட்டியல்

இவர்களுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் வழங்கப்படும். அதன்பிறகு குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கூறுகையில், மாநகராட்சியில் வரியினங்கள் செலுத்தாத ‘டாப் 100’ பேரின் பட்டியல் தயாராகி வருகிறது. பலரும் வரி செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை

வரி செலுத்தாத நபர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைசியில் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். எனவே வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்தி மாநகராட்சியின் நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என்று மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.