Varisu: “துணிவு படத்திலும் நான் தான் வில்லனாக நடித்திருக்க வேண்டியது; ஆனால்… !" – ஷாம் நேர்காணல்

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் சரத்குமாரின் மகன் அஜய் ஆக ஸ்கோர் செய்த மகிழ்ச்சியில் புன்னகைக்கிறார் ஷாம். அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். நம்மிடையே ‘வாரிசு’ படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

விஜய், ஷாம்

”ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இருபது வருஷத்துக்கு முன்னாடி விஜய் சாரோட `குஷி’யில் ஒரு சின்ன சீன்ல நடிச்சிருப்பேன். இப்ப படம் முழுவதும் வந்திருக்கேன். சரத் சார், பிரகாஷ்ராஜ் சார், பிரபு சார், ஶ்ரீகாந்த் சார்னு மல்டி ஸ்டார்ஸோடு நடிச்சிருக்கேன். விஜய் சார்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். சக நடிகர்களுடன் அவர் எந்த ஈகோவும் இல்லாமல் பழகினார். இன்னொரு விஷயம் ஸ்பாட்ல அவர் மொபைல் போன் பயன்படுத்தினதில்ல. போன் பேசணும்னாக் கூட, லன்ச் பிரேக்ல தான் பேசுவார். இப்ப, நானும் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆச்சரியமான ஒரு விஷயம், எந்த காட்சிக்கும் ரிகர்சலே அவர் பார்க்க மாட்டார். காட்சிகளை அப்படி உள்வாங்கி, பிரதிபலிப்பார். எல்லோருடனும் கலகலப்பாக பேசுவார். மத்த நேரங்கள்ல அடுத்து நடிக்க கூடிய காட்சிகளை பற்றியே தான் சிந்திப்பார்.

வாரிசு

அதே போல ராஷ்மிகா மந்தனா.. எனர்ஜியான பொண்ணு. ஆரம்பத்தில் இருந்தே அவர் தீவிரமான விஜய் ரசிகைனால ஸ்பாட்டுல விஜய்யையே வச்ச கண் வாங்காமல் பார்த்துட்டு இருப்பார்.

பிரகாஷ்ராஜ் சார், இனிமையான மனிதர். படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் எல்லாருக்குமே தன் வீட்டிலிருந்தே சாப்பாடு வரவழைத்து தருவார். சரத்குமார் சாரும் நானும் ரெகுலராக ஜிம் செல்பவர்கள் என்பதால் படப்பிடிப்பின்போது காலையில் நான்கரை மணிக்கே எழுந்து ஒன்றாகவே ஜிம்முக்கு சென்று விடுவோம். இந்தப் படத்தில் பிரபு சாருடன் நடித்தது புதிய அனுபவம் என்றாலும் அவருக்கும் எனக்குமான காட்சிகள் கொஞ்சம் குறைவுதான்.

‘வாரிசு’ ஷூட் முடிவடைந்ததும் விஜய் சார் எங்க எல்லாருக்குமே அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அவர் கையாலேயே பார்த்து பார்த்து பரிமாறினார்.

துணிவு

அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி ஸ்கூல் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார்.

நான் கூட சிலமுறை பள்ளிக்குச் செல்வேன்.. சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்குச் சென்று வருவார்.. அப்போது கூட அங்கே அஜித் சார் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, ‘அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தன் குழந்தைகளுக்காக வருகிறார்.. நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்’ என என்னைத் திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கியுள்ளேன்.

இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் ஹெச். வினோத் கேட்ட தேதிகளும் ‘வாரிசு’ படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் ‘துணிவு’ படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதேசமயம் அந்த கதாபாத்திரத்திற்காக என்னை யோசித்ததற்காக இயக்குநர் வினோத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்கிறார் ஷாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.