அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவு பொதுக் கூட்டம்: மாற்று இடத்தில் அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மாற்று இடத்தில் அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், “இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மொழிப்போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனவரி 25-ம் தேதி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்திற்கு கடந்தாண்டு வரை அனுமதியளிக்கப்பட்ட நிலையில், பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி ஜனவரி 7-ம் தேதியே மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை காவல் துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எம்எல்ஏகள் பலர் கலந்து கொள்ளும் இந்த பொதுக் கூட்டத்துக்கு அனுமதியளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ், “பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் முப்பது ஆண்டுகளாக மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கவில்லை” என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், “அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடந்த 6-ம் தேதியே திமுக சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது அதிமுக சார்பில் ஏழாம் தேதிதான் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை திமுகவிற்கு அனுமதி அளிக்க உள்ளது. மேலும், மாற்று இடமாக பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகால் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக விரும்பினால், அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பல்லடம் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் புதிதாக விண்ணப்பிக்க அதிமுகவிற்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில், அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.