ஓபிஎஸ்சிற்கு ’நோ’… பதறி போன அதிமுக ர.ர.,க்கள்; ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்
ஓ.பன்னீர்செல்வம்
தரப்பிற்கும் மட்டும் அழைப்பு விடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பு ஷாக்

இதனால் ஓபிஎஸ் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இனிவரும் அனைத்து கூட்டங்களிலும் தங்கள் தரப்பையும் தவறாமல் அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதேசமயம் ஈபிஎஸ் தரப்பில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற பட்டியலில் அதிமுக நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

தேர்தல் ஆணைய முடிவு

ஆனால் அதுதொடர்பான அழைப்பு யாருக்கு அனுப்பப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை ஈபிஎஸ் தரப்பின் கைகளில் கிடைத்து அவர்கள் மட்டும் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் கடைசியாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் இன்னும் நீடிப்பதை அறிய முடிகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அப்படி பார்த்தால் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். அவரது தரப்பே ஈரோட்டில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது சர்ச்சையாகி உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பினரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பதவி

எடப்பாடி பழனிசாமி
தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது. எனவே இரட்டை இலை சின்னத்தை பெறும் உரிமை தனக்கே இருப்பதாக ஓபிஎஸ் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணனுண்ணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவித்ததன் படி அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தேர்தல் ஏற்பாடுகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அனைத்து தரப்பினருக்கும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அரசியல் கட்சிகள் சில சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

இந்த அறை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் விரைவாக தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து பணிகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.