சேலத்தில் கடன் தொல்லையால் விபரீதம்; கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை: சாவுக்கு 6 பேர் காரணம் என எழுதிய கடிதம் சிக்கியது

சேலம்: சேலம் அழகாபுரத்தில் கடன் தொல்லையால், கணவன், மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தங்களுடைய சாவுக்கு 6 பேர் தான் காரணம் என எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (56). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என 2 மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. 2 மகன்களும் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

ராமகவுண்டர் தனியார் கல்லூரியில் ஹோமி யோபதி மருத்துவராகவும், ராமவேல் ஆட்டோ டிரைவராகவும் பணியாற்றி வருகின்றனர். ராஜேந்திரன் பெரியபுதூர் பகுதியில் சைக்கிள் கடை வைத்திருந்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டில் ராஜேந்திரன் உள்பட 9 பேர் வாங்கிய லாட்டரியில் ₹7 கோடி பரிசு விழுந்துள்ளது. அதில், ₹1 கோடி ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு ராமவேல் வீட்டு மாடியில் இருந்து கீழே வந்துள்ளார். அப்போது பெற்றோரின் அறை திறந்து கிடந்தது.

அங்கு சென்று பார்த்தபோது, பெற்றோரான ராஜேந்திரனும், சாந்தியும் பூச்சி கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதை பார்த்து கதறி அழுத ராமவேல், அழகாபுரம் போலீசுக்கு தகவல் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தம்பதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

அதை செலுத்த முடியாத நிலையில் இருந்தபோது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டருகே உள்ள நடேசன் என்பவரிடம் ₹19 லட்சம் கடன் வாங்கி வங்கியில் உள்ள வீட்டு பத்திரத்தை மீட்டு, நடேசனிடம் அடமானத்துக்கு  கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டாக நடேசனிடம்  வாங்கிய கடனுக்கு உரிய வட்டி செலுத்தவில்லை. அசலையும் திருப்பி தரவில்லை. இதனால் நடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனிடம் கடனுக்கு வீட்டை எழுதி தர வேண்டும். இல்லையெனில் வாங்கிய பணத்தை தர வேண்டும் என தெரிவித்து வந்துள்ளனர். நேற்று இரவும் பணத்தை கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் நேற்றிரவு பூச்சி கொல்லி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், தங்களுடைய சாவுக்கு நடேசன் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் உள்பட 6 பேர் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.