தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் இந்தி மொழியை வளர்க்க ரூ5.78 கோடி மோசடி: மாஜி தலைவர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு

பெங்களூரு: தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், அந்தந்த மாநில மொழிகளே பிரதானமாக பேசப்படுகிறது. இந்த மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபா (டி.பி.எச்.பி.எஸ்) செயல்பட்டு வருகிறது. 1964ம் ஆண்டில் இயற்றப்பட்ட நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் இந்த அமைப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஒன்றிய அரசு அங்கீகரித்து இருந்தது.

மேலும் தென்மாநில மக்களிடையே இந்தி மொழியை கொண்டு செல்வதற்காக பல கோடி ரூபாய் நிதியும் அளித்து வருகிறது. இந்த அமைப்பின் கர்நாடக மாநிலம் தார்வாட் முன்னாள் தலைவராக ஷிவ்யோகி ஆர்.நிரால்கட்டி செயல்பட்டு வந்தார். கடந்த 2004-05 முதல் 2016-17ம் ஆண்டு வரை, மேற்கண்ட நிறுவனம் 600 ஆசிரியர்களை பணியமர்த்தியதின் மூலம் ரூ.5.78 கோடியை முறைகேடாக  பயன்படுத்தியதாகவும், இந்த தொகையை பி.எட் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும், ஒன்றிய அரசிடம் பொய்யான அறிக்கைகளை அளித்ததாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தணிக்கையில் தெரியவந்தது. அதையடுத்து இவ்விவகாரத்தை பெங்களூரு பிரிவு சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் முன்னாள் தலைவர் ஷிவ்யோகி ஆர்.நிரால்கட்டி, அவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீது மோசடி மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.