கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை? இறந்த 9 மாத சிசுவோடு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்!

ஆம்பூரில் வயிற்றிலேயே குழந்தை இறந்ததாகக் கூறிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். கர்ப்பிணி பெண்ணிற்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்காததாக கூறி, இறந்த சிசுவுடன் மக்கள் போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரின் மனைவி பாக்கியலட்சுமி. கர்ப்பிணியாக இருந்த பாக்கியலட்சுமி, ரெட்டித்தோப்பு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பாக்கியலட்சுமி, ரெட்டிதோப்பு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குழந்தை நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், வயிற்றில் எவ்வித அசைவும் இல்லையெனக் கூறி பாக்கியலட்சுமி மற்றும் விஜய் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அரசு மருத்துவனைக்குச் சென்றுள்ளனர்.
image
அங்கு பாக்கியலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி குழந்தையை இறந்த நிலையில் மீட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமியின் உறவினர்கள் ஆம்பூர் ரெட்டிதோப்பு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாக்கியலட்சுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனை வழங்கவில்லையெனக் கூறி, இறந்த 9 மாத சிசுவுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுக்கையிட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறையினர் மற்றும் ஆம்பூர் வட்டாச்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
image
24 மணி நேரமும் இயங்க வேண்டிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாலை 7 மணியோடு மூடப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.