புதுச்சேரியில் ப்ரீபெய்ட் மின் மீட்டர்: ஏழை, நடுத்தர மக்கள் அச்சம்| Prepaid electricity meter in Puducherry: Poor, middle class fear

புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்சாரம், உயர் மின் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் கம்பெனிகள் என மொத்தம் 4.07 லட்சம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 350 மெகாவாட் மின்சாரம் தேவை. இதற்காக நெய்வேலி, ராமகுண்டம் அனல்மின் நிலையங்கள், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை புதுச்சேரி மின்துறை வாங்குகிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ. 1,600 கோடி செலவிடப்படுகிறது.

இந்த மின்சாரம் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு பிரித்து அனுப்பி, நுகர்வோர் பயன்படுத்தும் அளவுக்கு பில் தயாரித்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டண வசூல் மூலம் மின்துறை ஊழியர்களுக்கு மாதச் சம்பளம், ஓய்வூதியம், டிரான்ஸ்பார்மர்கள், மின் விளக்குகள் உள்ளிட்டவைகள் வாங்குவது என அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்படுகிறது.

இழப்பு

மின்சாரத்தை வினியோகிக்கும்போது ஏற்படும் லைன் இழப்பு, மின் திருட்டு மூலம் தினசரி 50 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட மின் நுகர்வோரிடம் துணை கட்டணம் என்ற பெயரில் மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது.

தனியார் மயம்

மின்துறையை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்து அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தது. மேலும், மின்துறை ஊழியர்கள் நீதிமன்றம் சென்றதால், தனியார் மயமாக்கும் டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ப்ரீபெய்ட் திட்டம்

இந்நிலையில், தனியார்மயம் சர்ச்சை ஓய்வதிற்குள் ‘ப்ரீபெய்ட் மீட்டர்’ திட்டத்தை மின்துறை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ. 251.10 கோடி மதிப்பில் திட்டம் தயாரித்து, மத்திய அரசு அனுமதி பெற்று செயல்படுத்துகிறது.இத்திட்டத்தின் மூலம் 4.07 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது.

ஏற்கனவே நகர பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 33,000 ஸ்மார்ட் மீட்டர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான பி.எப்.சி.சி.எல்., நிறுவனம் மேற்கொள்கிறது.

டோடெக்ஸ் முறையில் மீட்டர் பொருத்துவது, மின் பயன்பாடு கண்காணிப்பு,சாப்ட்வேர், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகள் வழங்கி90 மாதங்களுக்கு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் பராமரிக்கும்.மின் மீட்டர் பழுது ஏற்பட்டாலும் அந்நிறுவனமே அதை சரிசெய்து, புதிய மீட்டர் பொருத்தி பராமரிக்க உள்ளது.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 15 சதவீதம் மானியமாக ரூ. 37 கோடி வழங்கும். திட்ட பணிகளை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்தால் 7.5 சதவீதம் ரூ. 18 கோடி ஊக்கத் தொகை வழங்கும். மீதி தொகை ரூ. 214 கோடியை புதுச்சேரி மின்துறை வழங்க வேண்டும்.
இதற்காக மாதந்தோறும் ஒரு மீட்டருக்கு ரூ. 80 வீதம் மாதம் ரூ. 32.56 லட்சத்தை, 90 மாதங்களுக்கு, ப்ரீபெய்ட் திட்டம் மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு மின்துறை வழங்கும்.

latest tamil news

சப்பைக்கட்டு

‘ப்ரீபெய்ட் மின் மீட்டர்’ திட்டத்தை மேற்கொள்வதால் நுகர்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை என மின்துறை அறிவித்துள்ளது. மின்துறையின் அனைத்தும் செலவுகளும் நுகர்வோரின் கட்டண பில்லில் இருந்தே செய்யும்போது, ரூ. 214 கோடியும் நுகர்வோரின் மின் கட்டண பட்டியலில் சப்ஜார்ஜ், இழப்பு கட்டணம் என ஏதேனும் ஒரு பெயரை புகுத்தி வசூலிப்பர்.
ஆனால், நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என மின்துறை சப்பைக்கட்டு கட்டுகிறது.

பாதிப்பு

ப்ரீபெய்ட் திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது, மொபைல்போன் பயன்பாடு போல, மின் நுகர்வோர் ஒவ்வொரு மாதத்திற்கும் முன்னதாக தங்களின் மின் இணைப்பு அக்கவுண்ட்டில் பணத்தை டிபாசிட் செய்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் தங்களின் வீடு, கம்பெனியில் செலவிடப்பட்ட மின்சாரம், அதற்காக கழிக்கப்பட்ட தொகை விபரம் மொபைல் செயலி வழியாக தெரிந்து கொள்ள முடியும்.

அக்கவுண்ட்டில் உள்ள பணம் 90 சதவீதம் காலியானதும், மின் இணைப்பு அக்கவுண்ட்டில் பணம் ரீசார்ஜ் செய்ய நுகர்வோரின் மொபைல்போனுக்கு குறுந்தகவல் செல்லும். பணம் இல்லை என்றால் மறுநாள் காலை மின் இணைப்பு துண்டிக்கப்படும். ரீசார்ஜ் செய்த பின்பே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும்.

புதுச்சேரி மக்கள் தொகையில் 4.5 சதவீதம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இதுதவிர 1 சதவீதம் அரசு ஓய்வூதியர்கள், மத்திய அரசு பணியாளர்கள் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதம் முன்பே சம்பளம் வந்துவிடும்.
இதனால், அரசு ஊழியர்கள் வேண்டுமெனால் முன்கூட்டியே மின் கட்டணத்திற்கு டிபாசிட் செய்து கொள்ள முடியும்.

புதுச்சேரியில் ஏழை எளிய மக்கள் மின் கட்டணத்தை பல மாதங்கள் பாக்கி வைத்து, மின் இணைப்பு துண்டிக்க வரும்போது, நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் மின் கட்டணத்தை செலுத்துவர். நடுத்தர மக்களில் பலரது கதையும் இதுதான்.

ப்ரீபெய்ட் திட்டத்தை அமல்படுத்தினால், மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழை எளிய மக்கள் வீடுகள் இருளில் தான் மூழ்கி கிடக்கும்.
மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படும். மொபைல்போன் பயன்பாடு தெரியாத ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களுக்கு மின் இணைப்பு அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் உள்ளது, எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது, எப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற விபரமும் தெரிந்து கொள்ள முடியாது. அத்தகையை ஏழை எளிய, விபரம் தெரியாத மக்களுக்கு இத்திட்டம் பெரும் பாதிப்பாக மாறும்.

அதிகாரிகள் விளக்கம்

மின்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மின் இழப்பை தடுக்க துணை மின் நிலையம், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவையில் மீட்டர் பொருத்தி, நேரடியாக சென்று கணக்கீடு செய்யப்படுகிறது. ப்ரீபெய்ட் மீட்டர் பொருத்தப்பட்டால், எந்த இணைப்பு, எந்த துணை மின் நிலையத்தில் இருந்து எந்த இடத்தில் மின் இழப்பு ஏற்படுகிறது என்பதை ஒரே இடத்தில் இருந்து தெரிந்து தடுக்க முடியும்.

நேர்மையாக மின் கட்டணம் செலுத்துவோருக்கு இதனால் எந்த பாதிப்பு இல்லை. மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு மட்டுமே இது பாதிப்பு. மொபைல்போன் போன்று முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படாது. காலை நேரத்தில் தான் துண்டிப்பு இருக்கும்’ என்றனர்.

அரசுக்கு லாபம்

‘ப்ரீபெய்ட் மீட்டர்’ திட்டம் முதல்கட்டமாக அரசு அலுவலகங்களுக்கும், அடுத்து பொதுமக்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, ஸ்பின்கோ, கூட்டுறவு துறை என பல துறைகள் ரூ. 500 கோடிக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, அரசு நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கி தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்து ஒவ்வொரு துறையும் புதிய கணக்கு துவங்குவர். இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ. 500 கோடி அரசுக்கு லாபமாக மாறும். ஆனால் அவை மின் நுகர்வோரின் பில்லில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.