பிராந்திய மொழிகளில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதி அறிவிப்பு!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் நாளை தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியாகவுள்ளது. அதாவது, 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை eSCR (மின்னணு உச்ச நீதிமன்ற அறிக்கைகள்) வழங்கும் எனவும், இந்த அம்சம் குடியரசு தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களிடம் eSCR உள்ளது அதில் இப்போது 34,000 தீர்ப்புகள் உள்ளன. மீள் தேடல் வசதியையும் கொண்டுள்ளது. பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 1091 தீர்ப்புகள் எங்களிடம் உள்ளது. இவை குடியரசு தினத்தன்று வெளியிடப்படும்.” என்றார்.

ஒடியாவில் 21, மராத்தியில் 14, அஸ்ஸாமீஸ் 4, கரோவில் 1, கன்னடத்தில் 17, காசியில் 1, மலையாளத்தில் 29, நேபாளியில் 3, பஞ்சாபியில் 4, ஏற்கனவே தமிழில் 52, தெலுங்கில் 28, உருதுவில் 3 தீர்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து பட்டியலிடப்பட்ட மொழிகளிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

e-SCR திட்டம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று உச்ச நீதிமன்றத்தால் புத்தாண்டையொட்டி தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அதிகாரப்பூர்வமாக அப்படியே அதாவது உள்ளது உள்ளபடியே, டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான முயற்சியே இந்த திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த அவர், இதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் என பலரும் அவரது கருத்தை வரவேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஆன்லைன் இ-இன்ஸ்பெக்ஷன் மென்பொருளின் தொடக்க விழாவில் பேசியபோது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக நீதிபதி ஏஎஸ் ஓகா தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.