பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு… கமலும், திமுக ‘பி’ டீமும்- ஜெயக்குமார் சுளீர்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த விஷயம் தினசரி தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. இதில் லேட்டஸ்டாக வந்த செய்தி என்னவென்றால் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு
மக்கள் நீதி மய்யம்
கட்சி தலைவர் கமல் ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது தான். ஏற்கனவே டெல்லியில் நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார்.

தேர்தல் நிலைப்பாடு

அப்போதே கமல் ஹாசன் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனப் பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதாக கூறுகின்றனர். இருப்பினும் வரும் 2024 மக்களவை தேர்தல் நிலைப்பாடு பற்றி தற்போதே தெரிவிக்க முடியாது என்று மழுப்பிவிட்டார். காங்கிரஸிற்கு கமலின் ஆதரவு பற்றி பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏற்கனவே கமலை திமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சித்திருக்கிறோம்.

ஜெயக்குமார் விமர்சனம்

இப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கியதில் இருந்தே திமுகவிற்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் முடிச்சுகள் அனைத்தும் அவிழ்ந்துவிட்டன. திமுக ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு கடும் அதிருப்தி இருக்கிறது. ஏதாவது செய்திருந்தால் தானே மக்கள் மத்தியில் எடுபடும்.

அதிருப்தி வாக்குகள்

அதேசமயம் அதிமுக ஆட்சியின் கடந்த கால சாதனைகள் நிச்சயம் மக்களை கவரும்ம். எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் சரி. மக்களின் எழுச்சி, புரட்சி முன்பு எல்லாமே தவிடு பொடியாகி விடும். ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும். திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலின் போது முதல்வராக கருணாநிதி தான் இருந்தார்.

இடைத்தேர்தல் முன்னுதாரணம்

அப்போது தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு மாயத்தேவரை நிற்க வைத்து கழக தலைவராக எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். அப்போது திமுக தோற்கவில்லையா? ஜெயலலிதா கட்சி தலைமை பொறுப்பு வகித்த போது மருங்காபுரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.

அதிமுகவில் பூசல்

அப்போதும் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோற்றது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதியும் வரலாறு படைக்கும். அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து உட்கட்சி பூசலால் தவித்து கொண்டிருப்பதாக தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். அது ஒரு மாயை. உண்மை கிடையாது. கள நிலவரம் என்னவென்றால் அதிமுக ஒன்றுபட்டு நிற்கிறது. நிச்சயம் திமுகவை வென்று காட்டுவோம்.

கமல் ஹாசனை பொறுத்தவரை திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அவர் அரசியலில் இருந்து தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தான் வருவார் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.