மாற்றுத் திறனாளிகளுக்காக பேருந்தின் பின்புறம் சாய்தள பாதை அமைப்பதில் பிரச்சினை என்ன? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: பேருந்தின் பின்புறம் சாய்தளப் பாதை அமைப்பதால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும். அதேசமயம் 900 மற்றும் 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை விற்பனை செய்ய உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பேருந்துகளின் பின்புறம் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் சாய்தளம் பாதை அமைக்க முடியுமா என்பது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து பொறியாளர்காளிடம் ஆலோசித்து தெரிவிக்கும்படி அரசு தரப்பிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், “பேருந்தின் பின்புறம் சாய்தளப் பாதை அமைப்பதால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும். அதேசமயம் 900 மற்றும் 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை விற்பனை செய்ய உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன. ஆனால், 400 மில்லி மீட்டர் உயரத்திலான தாழ்தள பேருந்துகளை விற்பதற்கு ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக இருக்கிறது. மற்ற பேருந்து நிறுவனங்கள் இவ்வகை பேருந்துகளை இதில் ஆர்வம் காட்டவில்லை.

900 மில்லி மீட்டர் உயரம் கொண்ட பேருந்துகளாக இருந்தால் லிஃப்ட் வசதி அமைக்க முடியும். 650 மில்லி மீட்டர் உயரமுடைய பேருந்தாக இருந்தால் சாய்தள வசதியை அமைக்க முடியும். மேலும் பேருந்து கொள்முதல் தொடர்பான டெண்டர் பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், “மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான பேருந்துகளைதான் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஏதோ ஒரு பேருந்தை வழங்கிவிட்டு அதில்தான் பயணிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக இயக்க வேண்டுமென வலியுறுத்திவில்லை. 10 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகளைத்தான் இயக்க கோருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு வகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், தாழ்தள பேருந்துகள் வரும் நேரத்தை தெரிவிக்கும் செயலியை அறிமுகப்படுத்தவும் அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.