Kavita Krishnamurthy: மெய்மறக்கச் செய்த கவிதா கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் ஹிட்ஸ்

கவிதா கிருஷ்ணமூர்த்தி டெல்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார்.

கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், பின்பு மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹேமந்த் குமாரின் இசையில் பெங்காலி பாடலை, லதா மங்கேஷ்கருடன் தனது ஒன்பது வயதில் பாடினார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற ஒவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த இவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேம மாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றி பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தன. பின்பு அவர் ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தின. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த இவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியாக விளங்கினார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்- சிரவண் , ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.

இத்தகைய ஹிட் பாடல்களை கொடுத்த அவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர். இவர் திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பல மொழிகளில் தனது அற்புதமான இசையால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சோஷியல் மீடியாவில் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் ஹிட்ஸ்

* காற்றே என் வாசல் – ரிதம்
* தாண்டியா – காதலர் தினம்
* அச்சச்சோ –  ஷாஜஹான்
* உப்பு கருவாடு –  முதல்வன்
* பட பட பட்டாம்பூச்சி –  மஜூனு
* யதுமகியே – சீடன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.