தேர்தல் முடிஞ்சதும் ஈரோட்டிற்கு ஜாக்பாட்… அமைச்சர் கொடுத்த அப்டேட்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக தமிழ்நாட்டு அரசியல் களம் தயாராகி கொண்டிருக்கிறது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
திமுக
கூட்டணியை பொறுத்தவரை சீட் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என கச்சிதமாக வேலைகளை முடித்து விட்டது.
காங்கிரஸ்
சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

களமிறங்கிய அமைச்சர்

குறிப்பாக வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு சொந்த மாவட்டம் என்பதால் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியிலேயே முகாமிட்டு வேலைகளை பார்த்து வருகிறார். இதுவரை ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியார் நகர், மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கூட்டணி கட்சிகள் கைகோர்ப்பு

நேற்றைய தினம் 5வது நாளாக ஈரோடு ராஜாஜிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.முத்துசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

விரைவில் ஈவிகேஎஸ்

தற்போது வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறோம். முதல் நாளில் நாங்கள் மட்டும் சென்றோம். அதன்பிறகு கூட்டணி கட்சி தலைவர்களும் இணைந்து கொண்டனர். வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது சென்னை சென்றிருக்கிறார். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து அவர் இங்குள்ள 33 வார்டுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்.

பிரச்சார வியூகம்

அவருடைய சார்பாக சஞ்சய் சம்பத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மக்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளனர். இளங்கோவன் விரைவாக வந்து எங்களுடன் இணைந்து கொள்வார். நாங்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியதற்கு எங்கள் தோழர்கள் தான் காரணம். கட்சி நிர்வாகிகள் வந்து உடனடியாக பிரச்சாரத்தில் ஈடுபடலாம் எனக் கேட்டுக் கொண்டனர்.

அமோக வெற்றி

அந்த அளவிற்கு எங்கள் கட்சி வலுவாக இருக்கிறது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. முதல் நாள் கூட்டத்திலேயே 5 ஆயிரம் பேர் வருகிறார்கள் எனச் சொன்னால், அது வலுவில்லாத நிலையை காட்டுகிறதா? எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனம் செய்யும். எங்களை பொறுத்தவரை இன்னும் இரண்டு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என நினைக்கிறோம்.

வளர்ச்சி திட்டப் பணிகள்

ஈரோடு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 450 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு வந்து சேரும். உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகரின் மையப் பகுதியில் உள்ள சரக்கு குடோன் மற்றும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.