பொங்கல் இலவச வேட்டி, சேலை என்னாச்சு..? – ரேஷன் கார்டுதாரர்கள் அப்செட்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி – சேலைகள் வழங்குவதற்கு 2022-2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது, திமுக அரசின் நிர்வாக திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஏழையெளிய மக்களுக்காக, நெசவாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் 1983-ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வேட்டி-சேலைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் கடந்தும் நியாய விலைக் கடைகள் மூலம் இலவச வேட்டி-சேலை வழங்கப்படாதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தினை தி.மு.க. அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும், இதனைத் தொடர வலியுறுத்தி நெசவாளர்கள் போராட்டம் நடத்துவதாகவும் சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர், இதற்கான நிதி 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலவச வேட்டி-சேலைத் திட்டம் தொடரும் என்றும் உறுதி அளித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், இதற்கென கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே வடிவமைப்பில் வழங்கப்பட்டு வந்த வேட்டி-சேலையை மாற்றி, பத்து வடிவமைப்புகளில் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து வடிவமைப்புகளில் வேட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே விநியோகிக்க மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்தப் புதிய வடிவமைப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டது போன்ற புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.

ஆனால் இன்று பொங்கல் பண்டிகை முடிந்து பத்து நாட்கள் மேலாகியும் இலவச வேட்டி-சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையிலேயே இலவச வேட்டி-சேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் திட்டத்தை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒரு திட்டம் எந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் அரசின் செயல்பாடு இருக்க வேண்டும். ஆனால், அரசினுடைய செயல்பாடு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை வழங்கப்படும் என்ற ஒரு குறிக்கோளையை முற்றிலும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக, பொங்கல் பண்டிகையன்று புத்தாடை அணிந்து கொள்ள இயலாத சூழ்நிலை பெரும்பாலான ஏழை, எளிய மக்களுக்கு இந்த ஆண்டு ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகையே முடிந்த நிலையில், இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படுமா என்ற சந்தேகமும் மக்களிடைய ஏற்பட்டுள்ளது.

இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசிற்கு இருக்கிறது. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி-சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.