கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா: 3,500 இந்தியர்களுக்கு அனுமதி; இலங்கை அரசு அறிவிப்பு!

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இரு நாட்டு மீனவர்களும் வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு, கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்லத் தேவையில்லை.

இலங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில், இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்க அதிபர் ( ஆட்சியர்) அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் வரும் மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இலங்கை பக்தர்கள் 4,500 பேர் மற்றும் இந்தியப் பக்தர்கள் 3,500 பேர் என மொத்தம் 9,000 பேர்வரை பங்கேற்க அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், இலங்கைக் கடற்படை அதிகாரிகள், போலீசார், ராணுவத்தினர், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்தாண்டு நடந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு தயக்கம் காட்டியது. தொடர்ந்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தை அடுத்து கடந்த ஆண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 500 பக்தர்களுக்கு மட்டுமே இலங்கை அரசு அனுமதியளித்தது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட இந்தியப் பக்தர்கள் 3,500 பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது, இந்தியப் பக்தர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திருவிழாவிற்கான முழு ஏற்பாடுகளை இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு நிர்வாகம் மற்றும் இலங்கைக் கடற்படை சார்பில் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.