கல்வி தான் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தின குடியரசு தின ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

இவ்விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் இளைஞர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்திடும் வகையில் வட்டார அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு என கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் இப்போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். கல்வி மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்பதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை மேம்பாட்டிற்காக எழுச்சிமிகு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.” என்றார்.

தொடர்ந்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “கல்வி தான் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம், கல்வி தான் ஒரு மனிதனுக்கு மனிதநேயம் போன்ற உயரிய குணங்களை வளர்க்கும். மாணவ மாணவியர்கள் வகுப்பறைகளில் கற்கும் அறிவியல், கணிதம், மொழிப் பாடங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதும் முக்கியம். விளையாட்டுப் போட்டிகள் மூலம் வெற்றி பெறுவதற்கான உழைப்பு, வியூகம், சக மாணவர்களுடன் நட்புணர்வு போன்றவற்றை கற்பதோடு வெற்றியையும் தோல்வியையும் சமமாக கருதும் மனநிலையையும் பெற முடியும், இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.” என்றார்.

இதனையடுத்து, மதுரை தங்கராஜ் சாலையில் அரசுத்துறை சார்ந்த போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் முறைப்படி தங்களை தயார் செய்வதற்கு வசதியாக அமர்ந்து படிக்கும் விதமாக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.45 இலட்சம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் பயிற்சி மைய கட்டிடம், படிப்பக கூடாரம், கண்காணிப்பு கேமிரா வசதிகள், அமரும் இருக்கைகள், நடைபாதை, கழிப்பறைகள், நுழைவுவாயில், சுற்றுசுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மொத்தம் ரூ 75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த படிப்பக மையத்தை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.