தமிழக ரேஷன் கார்டுகள்: ஊக்கத்தொகை தொடர்பாக வந்தது சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக பொங்கல் பரிசு, சிறப்பு நிவாரணத் தொகை உள்ளிட்டவை ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் தான் வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டு பொங்கல் பரிசு எந்தவித சிக்கலும் இன்றி விநியோகம் செய்யப்பட்டது.

பொங்கல் பரிசு

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் என அனைத்து கார்டுதாரர்களுக்கும் சென்றடையும் வகையில் முதல்வர்
மு.க.ஸ்டாலின்
தலைமையிலான திமுக அரசு உத்தரவிட்டது. அதை செயல்படுத்தியும் காட்டியது. அடுத்தகட்டமாக தரமான பொருட்களின் எடையும் எந்தவித சமரசமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் சிக்கல்

தற்போது இயந்திரங்கள் மூலம் ஒவ்வொரு பொருளும் எடை போடப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் சில இடங்களில் முறைகேடுகள் நடத்தப்பதாக பேச்சு அடிபடுகிறது. மேலும் ரேஷன் கடை ஊழியர்களே பதுக்கி வெளி கடைகளுக்கு பிளாக்கில் விற்று விடுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாக்கெட் விநியோகம்

இந்த வரிசையில் பாக்கெட்டில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறது. இதன்மூலம் எடையும் மாறாது. பூச்சிகள் அரிக்கும் வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். இந்த விஷயத்தை மாநில அரசு பரிந்துரையில் வைத்துள்ளது. இதற்கிடையில் அரிசியை செறிவூட்டி அதிக சத்துகள் நிறைந்ததாக விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி

அடுத்த ஓராண்டிற்குள் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கிடைக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் இருந்து முக்கியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மத்திய அரசு திட்டம்

அதாவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. எத்தனை அரிசி அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டதோ அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 0.50 ரூபாய் அளவிற்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவரங்கள் தேவை

இதற்காக மே 2020 முதல் நவம்பர் 2020 வரையும், மே 2021 முதல் மார்ச் 2022 வரையும் விநியோகம் செய்யப்பட்ட அரிசி குடும்ப அட்டைகளின் விவரம் கோரப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் கோரி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை தெற்கு துணை ஆணையாளர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அ.ஏகாம்பரம் கடிதம் அனுப்பியுள்ளார். இது சென்னை தென் சரக மண்டலங்களின் உதவி ஆணையாளர்களுக்கு முறைப்படி தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.