மோடியை நம்புங்க… பாஜகவிற்கு மெஜாரிட்டி வாக்குகள்- பெலகாவியில் அமித் ஷா வியூகம்!

வரும் ஏப்ரல் – மே மாதத்தில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரிய கட்சிகள் களமிறங்குகின்றன. தற்போது வரை மும்முனை போட்டி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக தெரிகிறது. தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வியூகங்கள் வகுத்து களப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

பெலகாவி வாக்கு வங்கி

கர்நாடகாவில் அதிக சட்டமன்ற தொகுதிகள் (27) பெங்களூரு நகர்ப்புற மாவட்டத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பெலகாவி (18) திகழ்கிறது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பெலகாவியில் 13 இடங்களில் பாஜக வென்றது. ஒட்டுமொத்தமாக 105 இடங்களுடன் தனிப் பெரும்பான்மை பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை. இந்நிலையில் ஹூப்ளியில் பாஜக சார்பில் ’ஜன சங்கல்ப யாத்ரா’வை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

குடும்ப ஆட்சி

அப்போது பேசிய அவர், பெலகாவி மக்களே காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் குடும்ப ஆட்சியை அமல்படுத்த பார்க்கின்றன. மக்களுக்காக வேலை செய்யும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. இந்தியாவை சர்வதேச அளவில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி உழைத்து கொண்டிருக்கிறார்.

டெல்லியின் சிக்னல்

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை பொறுத்தவரை 25 – 30 இடங்களில் வென்று விட்டு காங்கிரஸ் உதவி உடன் ஆட்சியமைக்க பார்க்கிறது. இதன்மூலம் குடும்ப ஆட்சிக்கு வித்திடுகிறது. காங்கிரஸ் கட்சியோ டெல்லியின் சிக்னலுக்கு ஏற்ப செயல்பட்டு ஊழல் நிறைந்த மாநிலமாக கர்நாடகாவை மாற்ற பார்க்கிறது. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியே கூட களமிறங்கலாம்.

காங்கிரஸ் வெற்றி

ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு போடும் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெற உதவும் என்பதை மறந்து விடாதீர்கள். பாஜக அப்படியில்லை. மக்கள் நலனுக்காக உழைக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டு கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தன. ஆனால் பாஜக மட்டுமே கர்நாடகாவை, இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறது.

மகதாயி நதிநீர் பிரச்சினை

எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி மலர செய்யுங்கள். தனிப் பெரும்பான்மை உடன் பாஜக வெற்றி பெற வாக்களியுங்கள். பெலகாவியில் உள்ள 18 இடங்களில் குறைந்தது 16ஐ கைப்பற்ற விரும்புகிறது. பிரதமர் மோடியை நம்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பேசுகையில், கர்நாடகா – கோவை இடையில் மகதாயி நதிநீர் பிரச்சினைகள் நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகா – கோவா நல்லுறவு

இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் இந்த திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த முடியும். அதேசமயம் சோனியா காந்தி தங்களுடைய காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், கோவாவில் இருந்து ஒரு சொட்டு மகதாயி நீர் கூட கர்நாடகாவிற்கு செல்லாது எனக் கூறியிருந்தார். அப்படியெனில் கர்நாடகாவில் உள்ள மாவட்டங்கள் எப்படி பலன்பெறும். பாஜகவிற்கு ஆதரவளிப்பதே சரி என்று அமித் ஷா வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.