அதானி குழும சொத்துக்கள் விவகாரம் – என்ன சொல்கிறது எல்.ஐ.சி.?

அதானி குழும சொத்துக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்.ஐ.சி. பதில் அளித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதானி குழுமமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் மாறிமாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், “அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது” என தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்புகள் கடும் சரிவைக் கண்டன. இதற்கு அதானி குழுமம், ”அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தது.
image
இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க், ”தாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் தாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்” என தெரிவித்திருந்தது.
இதற்கிடையே பங்குச் சந்தையில் கடந்த வாரம் (ஜனவரி 27) மேலும், அதானி குழுமம் கடுமையான சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளும் 20 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. இந்தச் சூழலில்தான் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் மீண்டும் குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த நிலையில், காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியிலும் முதலீடு செய்திருந்த சொத்துக்கள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
image
இதற்கு எல்.ஐ.சி. தரப்பில் இன்று பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அது, “சாதாரணமாக வணிகத்தைப் பொறுத்தவரை, தொழில் துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதலீட்டு விவரங்களைப் பகிர்ந்துகொள்ளாது. ஆனால், தற்போது அதானி குழும நிறுவனங்களின் எல்ஐசியின் சொத்துகள் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் குறித்து உண்மை நிலையைப் பகிர்ந்துகொள்ளவே இந்த அறிக்கை வெளிப்படுகிறது.
அதானி குழும நிறுவனங்களின்கீழ் டிசம்பர் 31, 2022 நிலவரப்படி பங்கு மற்றும் கடனின் கீழ் எல்ஐசியின் மொத்த இருப்பு ரூ. 35,917.31 கோடி. கடந்த பல ஆண்டுகளாக அனைத்து அதானி குழும நிறுவனங்களின் கீழ் வாங்கப்பட்ட பங்குகளின் மொத்த கொள்முதல் மதிப்பு ரூ. 30,127 கோடி. ஜனவரி 27, 2023 அன்று இதன் சந்தை மதிப்பு ரூ. 56,142 கோடி. அதானி குழுமத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை இன்றைய தேதியில் ரூ. 36,474.78 கோடி ஆகும். இருப்பினும் இந்த முதலீடுகள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் செய்யப்பட்டுள்ளது.
image
என்றாலும், எல்ஐசியின் மொத்த முதலீடுகளான 41.66 லட்சம் கோடியில், அதானி குழுமத்தில் 0.975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.