புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!

சென்னை: 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், பழைய அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை மாற்றி புதிய அட்டையைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய வாக்காளர் அடையாள அட்டையில் QR குறியீடு வசதியுடன் மிகச் சிறிய எழுத்து இடம்பெற்றிருக்கும். வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த ‘ஹாலோகிராம்’ இனி அட்டையில் ஒட்டப்படும். அடையாள அட்டையின் முன்புறத்தில் வாக்காளரின் புகைப்படமும், அவரது ‘நெகட்டிவ் இமேஜ்’ படமும் இருக்கும்.

போலி அட்டைகள் உருவாக்கப்படாமல் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றும் சாஹூ கூறினார்.

வாக்காளர் அட்டையில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

ஹாலோகிராம் அளவு: 16mm X 12mm. ஹாட் ஸ்டாம்ப் செய்யப்பட்டிருக்கும். 19-23 வெள்ளி மைக்ரான் பாலியஸ்டர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

மைக்ரோ டெக்ஸ்ட்: 19 முதல் 25 மைக்ரான் அளவிலான புகைப்படத்தின் எல்லையாக எழுத்துக்கள்.

கோஸ்ட் இமேஜ் பிரிண்டிங்: வாக்காளர் புகைப்படம் (முன் பக்கம்)

அட்டையின் அடிப்பகுதியில் உள்ள Guilloche பேட்டர்ன் (மூன்று வண்ண வடிவமைப்பு)

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் அவர்கள், இந்த தேர்தலில் தனித்தனியாக போட்டியிடும் முனைப்பில் உள்ளனர். பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிப்பேன் என ஓபிஎஸ் கூறியிருக்கும் நிலையில், இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.