பொங்கல் பரிசு தொகுப்பு ரிட்டர்ன்: அடேங்கப்பா இவ்வளவு பேர் வாங்கலையா?

பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தமிழர் திருநாளாம், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 21 பொருள்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பொருள்களின் தரம், ரொக்கம் வழங்காதது ஆகியவை விமர்சனங்களை எழுப்பியது.

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஜனவரி 9ஆம் தேதி முதல் இந்த பரிசு தொகுப்பு விநியோகம் நடைபெற்று வந்தது. பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பொருள்கள் மற்றும் ரொக்கப் பணத்தை பெற்றுக் கொண்டனர். பொங்கல் விடுமுறைக்குப் பின்னரும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

பொங்கல் விடுமுறைக்கு வெளியூர்களுக்கு சென்றவர்கள் அதன் பின்னர் தங்களுக்கான பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்கள் தகுதி பெற்றவர்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க முன்வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

“வடசென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதில், வடசென்னையில் 9 லட்சத்து 83,005 பேரும், தென்சென்னையில் 9 லட்சத்து 90,014 பேரும் ரூ.1000 வாங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்கவில்லை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,026 அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 அட்டைதாரர்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 அட்டைதாரர்களும் ரூ.1000 பரிசு தொகுப்பு வாங்கவில்லை. 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகை, ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் அரசுக்கு திரும்பி வந்துள்ளது என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.