பட்ஜெட் கூட்டத்தொடர்: பெருசா கவனிக்க வைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை!

மத்திய பட்ஜெட்
கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கவுள்ளது. இவர் கடந்த ஆண்டு ஜூலையில் இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தனது முதல் உரையை திரவுபதி முர்மு ஆற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்

இதையடுத்து காலை 11 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கை 2023ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் 2022ஆம் நிதியாண்டு எப்படி இருந்தது, 2023ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என அறிய முடியும். ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடுகள், கடன், பொருளாதார சிக்கல்கள் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பொருளாதார ஆய்வறிக்கை

இந்த அறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் மேற்பார்வையின் கீழ் தயார் செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் 2023-24ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது. அதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுவே ஆகும்.

என்னென்ன அறிவிப்புகள்

இதில் வருமான வரி குறைப்பு, வரிச் சலுகைகள், விவசாயிகளுக்கு கவர்ச்சிகர அறிவிப்புகள், இலவச திட்டங்கள், வேலைவாய்ப்பை பெருக்கும் நடவடிக்கைகள், புதிய ரயில் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் விவரங்கள்

நேற்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதில் எதிர்க்கட்சிகள் தாங்கள் எழுப்பவிருக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.