மத்திய பட்ஜெட் 2023-24 | தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் பெரிதாக இல்லாதது ஏமாற்றம்: தினகரன்

சென்னை: “தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2023-24 குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பொருளாதார தேக்க நிலை மற்றும் வேலையிழப்புகள் இந்தியாவை பாதிக்காதபடி எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. எனினும், கடந்த ஆண்டுகளில் இத்திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை இந்த ஆண்டிலாவது சரிசெய்யப்பட வேண்டியது அவசியம்.

இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பு, 20 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு, தோட்டக்கலை துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், இது வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடக்கூடாது. இத்திட்டங்கள் எளிதாக விவசாயிகளை சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தித்தருவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.புதிதாக ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கம், நாடெங்கும் 157 நர்சிங் கல்லூரிகள் ஆரம்பித்தல் போன்றவை பாராட்டத்தக்க அறிவிப்புகளாகும்.

மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்பு ரயில்வே கட்டண சலுகையை திரும்ப வழங்காததும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கான செயல்திட்டம் இல்லாததும், நேரடி வேலைவாய்ப்பை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் இல்லாததும், தமிழ்நாட்டுக்கான சிறப்புத்திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் பெரிதாக இல்லாததும் ஏமாற்றமளிக்கிறது. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் தனது பதிலுரையில் அளித்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.