எடப்பாடி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ராஜினாமா; சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்!

இன்னும் 25 நாட்கள் தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவிற்கு (பிப்ரவரி 27) அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. வேட்பாளர் அறிவிப்புகள் கிட்டதட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. மூன்றாவது நாளாக இன்றும் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார்கள்? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி பூசல்

குறிப்பாக அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலால் எடப்பாடி பழனிசாமி,
ஓ.பன்னீர்செல்வம்
என இருதரப்புமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி
தரப்பு வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன். இதில் கே.எஸ்.தென்னரசு ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருக்கிறார்.

கே.எஸ்.தென்னரசு ராஜினாமா

இவருக்கு 65 வயது. முன்னதாக ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கே.எஸ்.தென்னரசு தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார். இது அரசு பதவி என்பதால் அதை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி 25 வயது பூர்த்தி அடைந்தவர்கள் எம்.எல்.ஏவாக போட்டியிட முடியும்.

தீவிர பிரச்சாரம்

அதேசமயம் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். லாபம் ஈட்டக்கூடிய பதவியில் இருக்கக் கூடாது. நாடாளுமன்றம் வகுத்துள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நிறுவனத்தின் தலைவர் பதவியை இன்றைய தினம் கே.எஸ்.தென்னரசு ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரச்சாரத்தில் தீவிரம் காட்டப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை இலை

அதிமுகவிற்குள் இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இருவரும் தேர்தல் ஆணையத்திடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர்.

3 நாட்கள் அவகாசம்

இதுதொடர்பாக உரிய பதில் அளிக்க 3 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இரட்டை இலை முடக்கப்பட்டு சுயேட்சை சின்னம் வழங்குவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

ஆளுங்கட்சி தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னம் இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஒன்று. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் எளிதில் அடையாளம் கண்டுவிடுவர். ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பிற்கு ஒதுக்கப்படும் சின்னங்களை சாமானியர்கள், வயதானவர்கள் எப்படி சரியாக கண்டறிந்து வாக்களிப்பர் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.