சென்னை: நோபல் விருது பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய நூலின் தமிழாக்கம் நாளை (பிப்.3) மாலை சென்னை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் வெளியிடப்படுகிறது.
பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் 2009-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் எழுதிய ‘ஜீன் மிஷின்: ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்ற நூலின் தமிழாக்கப் பதிப்பை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம், காலச்சுவடு இணைந்து வெளியிடுகின்றன. சென்னை தரமணி ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி அரங்கில் நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி நாளை (பிப். 3-ம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் தலைவர் சசிகுமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். நூலை ‘இந்து’ என்.ராம் வெளியிடுகிறார். நூலைமொழி பெயர்த்துள்ள சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் பற்றி உரையாற்றுகிறார். எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி நூல் மதிப்பீடு உரை நிகழ்த்துகிறார். நூலாசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் ஏற்புரையாற்றுகிறார். காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.