இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு..!

புதுடெல்லி,

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் 2022 அக்டோபா் முதல் 2023 ஜனவரி வரையிலான 4 மாதங்களில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.935 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.42 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா்-ஜனவரி காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 1.871 கோடி டன்னாக இருந்தது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் சுமாா் 520 சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன. முந்தைய ஆண்டின் இதே தேதி நிலவரப்படி 510 ஆலைகள் மட்டுமே இயங்கி வந்தன.

உற்பத்தி செய்யப்படும் கரும்பு சாறின் ஒரு பகுதி எத்தனால் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்ட பிறகும், நடப்பு சந்தை ஆண்டின் ஜனவரி மாதம் வரை சர்க்கரை உற்பத்தி 1.935 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. கரும்பு உற்பத்தியில் நாட்டின் முன்னணி மாநிலமான மராட்டியத்தில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டு 72.9 லட்சம் டன்னாக இருந்தது. அது, தற்போது 73.8 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய கரும்பு உற்பத்தி மாநிலமான உத்தரபிரதேசத்தில் சர்க்கரை உற்பத்தி 50.3 லட்சம் டன்னிலிருந்து 51 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. கரும்பு உற்பத்தியில் மூன்றாவதாக இருக்கும் கா்நாடகத்தில் சர்க்கரை உற்பத்தி 38.8 லட்சம் டன்னிலிருந்து 39.4 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது..

2022-23 சந்தைப்படுத்தல் ஆண்டின் அக்டோபா்-ஜனவரி காலத்தில் மற்ற மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தி 29.3 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 25.1 லட்சம் டன்னாக இருந்தது.

மதிப்பீட்டு காலத்தில் சுமாா் 22.6 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்காக திருப்பிவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 16.3 லட்சம் டன்னை விட அதிகமாகும்.

எத்தனால் உற்பத்திக்காக அதிக அளவு கரும்புச்சாறு திருப்பிவிடப்படுவதால், 2022-23 சந்தைப்படுத்தல் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி 5 சதவீதம் குறைந்து 3.40 கோடிடன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.