ஈரோடு கிழக்கு – வாக்கு வேட்டையில் கரை வேட்டிகள்: தேர்தலால் பறிபோகும் வாழ்வாதாரம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிராச்சார பணிகள் வேகமெடுத்துள்ளன. திமுக அதிமுக கூட்டணிகள், நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் ஈரோட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் கரைவேட்டிகள் அணி வகுக்கின்றன.

திமுக வைக்கும் டார்கெட்!
காலை, மாலை இரு வேளைகளிலும் நடைபெறும் பிரச்சாரங்கள் குறித்து களத்தில் இறங்கி விசாரிக்கையில் ஈரோட்டின் தொழில், உற்பத்தி பணிகள், வேலைவாய்ப்பு என பல்வேறு வகைகளில் மாற்றங்களை சந்தித்துள்ளது தெரிய வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் முதல் முறையாக சந்திக்கும் இடைத்தேர்தல் இது. எனவே இதில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து களமாடி வருகின்றனர்.
ஈரோட்டில் ஆஜரான அமைச்சரவை!தமிழ்நாட்டில் அனைத்து துறை அமைச்சர்களும் ஒரே நேரத்தில் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர். ஆளுக்கொரு பக்கம் டீம் அமைத்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். எனவே எப்போதும் ஏதேனும் ஒரு பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டமும் கணிசமாக இருக்கிறது. எப்படி இவ்வளவு மக்கள் பிரச்சாரத்தை கவனிக்கின்றனர் என்றால், அதற்காக நடைபெறும் சிறப்பு கவனிப்புகள் குறித்து கூறுகிறார்கள்.
ஒரு நாளைக்கு 1000 ரூபாய் மற்றும் மேற்படி!தேர்தல் பிரச்சாரத்துக்காக காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு நபருக்கு தலா 500 வழங்கப்படுவதாக சொல்கிறார்கள். அதோடு சாப்பாடு மற்றும் மேற்படிகளும் கொடுக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாயுடன் இவை சேர்த்து கொடுக்கப்படுவதால் யாரும் கூலி வேலைகள், ஒப்பந்த வேலைகளுக்கு செல்வதில்லை. வீட்டில் உள்ள பெண்களுக்கும் இந்த தொகை வழங்கப்படுவதால் காலையிலேயே பிரச்சாரத்தை ஆர்வமுடன் கேட்க வந்துவிடுகின்றனர்.
வேலையை மறந்த தொகுதி மக்கள்!ஈரோட்டில் பன்னீர் செல்வம் பார்க், மணி கூண்டு ஆகிய பகுதிகளில் காலை வேளையில் கூலி வேலைகளுக்கு செல்வோர் கூட்டமாக குழுமியிருப்பார்கள். கட்டிட வேலை உள்ளிட்ட இதர வேலைகளுக்கு ஆள்கள் தேவைப்படுவோர் அங்கிருந்து தங்களுக்கு வேண்டிய எண்ணிக்கையில் ஆள்களை அழைத்துச் செல்வார்கள். தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த பகுதிகளில் யாரும் நிற்பதில்லை.
27ஆம் தேதிக்கு பின்னர் மாறும் ஈரோட்டின் தலையெழுத்து! ​​
இதனால் கூலி வேலைகளுக்கு ஆள்கள் இல்லாமல் திணறும் நிலை ஏற்பட்டது. கட்டிட வேலைகள் பாதியிலேயே பல இடங்களில் நிற்கின்றன. இதைப் பயன்படுத்தி வட இந்திய தொழிலாளர்கள் இந்த வேலைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கெனவே ஈரோட்டில் பெரும் பங்கு வேலைகள் வட இந்திய தொழிலாளிகளுக்குச் சென்று விட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு மிச்சமிருக்கும் வேலைகளிலும் வட இந்திய தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பிப்ரவரி 27ஆம் தேதிக்குப் பிறகு கட்சிகள் வந்த வழியைப் பார்த்து சென்றுவிட்ட பின்னர்தான் தங்கள் வாழ்வாதாரம் பறிபோனதை மக்கள் உணர்வார்கள் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.