'இனி கட்சிக்கும் ஓபிஎஸ்-க்கும் தொடர்பு இல்லை… நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான்' – இபிஎஸ் பிடிவாதம்

EPS Pressmeet About Supreme Court Verdict: கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட, அதிமுக பொதுக்குழு  செல்லுபடியாகும் என்றும், அதனை ஏற்று உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும் உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,”திருமண விழாவான இன்றைக்கு, உச்ச நீதிமன்றத்தின் சார்பில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி, உண்மை இன்றைக்கு வென்றது. அதிமுகவை பொறுத்தவரை ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

‘யார் வேண்டுமானாலும் வரலாம்’

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துதான் உச்சநீதிமன்றம் சென்றார். ஆனால், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் இன்றைக்கு நிறைவேறி உள்ளது” என்றார்.

மீண்டும் அதிமுகவை விட்டு வெளியே சென்றவர்கள், மீண்டும் வரலாமா என கேட்டதற்கு,”நாங்கள் ஏற்கனவே அதிமுகவிற்கு உழைத்தவர்கள் பாடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் வரலாம் என அழைப்பு விடுத்திருந்தோம். ஒரு சிலரை தவிர யாராக இருந்தாலும் சேர்ப்போம்.

நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான்

ஏற்கனவே, 4 வருடம் 2 மாதம் பொற்கால ஆட்சியை நான் வழங்கியுள்ளேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கூட அன்றைக்கு பல கருத்துக்களை தெரிவித்தார். ஒரு மாதம் அல்லது 3 மாதத்தில் இந்த ஆட்சி கலைந்து விடும் என்று கூறினார். ஆனால், 4.2 ஆண்டுகள் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை நாங்கள் வழங்கினோம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் வெற்றியை உறுதிசெய்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இன்றைக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்து விட்டதால் வாக்காளர்களை அடைத்து வைத்திருக்கிறது, திமுக அரசு. இதுவே எங்களுக்கு வெற்றி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான்” என்றார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மகள் உள்பட 51 புதிய ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தில் பங்கேற்று, மணமக்களுக்கு இபிஎஸ் தாலி எடுத்துகொடுத்தார். விழா மேடையிலும் அவர் காரசாரமாக பேசியிருந்து குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.