விருதுநகர்: வீட்டை இடிக்காமல் ஜாக்கியால் 12 அடி நகர்த்திய விவசாயி

விருதுநகர்: திருச்சுழி அருகே தனது வீட்டை இடிக்காமல் ஜாக்கிகளை பயன்படுத்தி 12 அடி நகர்த்தியுள்ளார் விவசாயி ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனையூரைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). விவசாயி. இவரது மனைவி பஞ்சவர்ணம். கடந்த 2001 முதல் 2005-ம் ஆண்டு வரை பிள்ளையார்நத்தம் ஊராட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். பனையூரில் பிள்ளையார்நத்தம் – கமுதி சாலையில் கடந்த 2003-ல் 2 மாடியுடன் வீடு கட்டினார். அன்றுமுதல் வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, இரு மின் இணைப்புகளுக்கான வரிகளையும் செலுத்தி ரசீது பெற்றுள்ளார். இந்த வீட்டுக்கு கடந்த 2018-ல் பத்திரமும் பதிந்துள்ளார்.

இந்நிலையில், லட்சமணன் கட்டியுள்ள வீடு 12 அடி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆக்கிமிரத்து கட்டப்பட்ட வீட்டை இடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தனது வீட்டை இடிக்காமல் ஜாக்கிகள் மூலம் நவீன தொழில்நுட்பத்தால் 2 மாடி வீட்டை 12 அடிகள் நகர்த்தி வைத்துள்ளார் விவசாயி லட்சுமணன்.

இதுகுறித்து லட்சுமணன் கூறுகையில், “பழைய தேர்தல் பகையால் என்னை ஊராட்சி நிர்வாகம் பழிவாங்குகிறது. ஆக்கிரமித்து வீடு கட்டியதாக என்மீது மட்டும் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் ஊராட்சி நிர்வாகம் அகற்ற முன்வருமா? கடந்த 2003-ல் ரூ.20 லட்சம் செலவில் வீடு கட்டினேன். அதை இடிக்க மனமில்லை. அதனால், ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஜாக்கிகளை பயன்படுத்தி வீட்டை நகர்த்தத் திட்டமிட்டேன். அதன்படி, 25 நாள்கள் அடித்தளத்தை தோண்டும் பணி நடைபெற்றது. அதன்பின் கடந்த 15 நாள்களாக ஜாக்கிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் வீடு நகர்த்தப்பட்டது. தற்போது 12 அடி நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகி உள்ளது. இதன்பின், தரையில் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ள இருக்கிறேன்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.