மகளிர் காவலர்களுக்கு குட் நியூஸ்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர்

இன்று (17.3.2023) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேரு உள் விளையாட்டரங்கில் திரண்டிருந்த மகளிர் காவலர்களிடம் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

“பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என்று மாற்றியமைக்கப்படும்.

2. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.

3. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.

4. பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம்” அமைக்கப்படும்.

5. பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது நினைவாக, அவரது பெயரில் “கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும்” ஆண்டுதோறும் வழங்கப்படும்.

6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.

7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.

8. பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, “காவல்துறையில் பெண்கள்” எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.

9. பெண் காவல் ஆளினர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் “பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு” (Career Counselling) ஒன்று அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.