நள்ளிரவில் கிணற்றில் குதித்த தாய், மகளை காப்பாற்றிய டி.எஸ்.பி, போலீசார்

நாகர்கோவில்: நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரை ரோட்டில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியவில் 2 பெண்கள் குதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் ரோந்து பணியில் இருந்தார். கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கிடைத்ததும், உடனடியாக அவர் போலீசாருடன் அங்கு விரைந்தார். கிணற்றுக்குள் இருந்த பைப்பை பிடித்தவாறு இரு பெண்களும் தத்தளித்துக் கொண்டிருந்தனர். குடிநீர் கிணறு என்பதால் வாளியுடன் கயிறும் இருந்தது. உடனடியாக டி.எஸ்.பி. நவீன்குமார், எஸ்.எஸ்.ஐ. சிவக்குமார் ஆகிய இருவரும் கிணற்றுக்குள் குதித்து, பெண்களின் உடலில் கயிற்றை கட்டி, மேலே இருந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மேலே தூக்கினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் தாய், மகள் என்பதும், தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கிணற்றுக்குள் குதித்ததும் தெரிய வந்தது. மகளுக்கு 23 வயதாகிறது. வடிவீஸ்வரத்தை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் தான் ஆகிறது. கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டதால், பார்வதிபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்கே மகள் வந்து விட்டார். மீண்டும் சேர்ந்து வாழ வீட்டை எழுதி தர வேண்டும் என கேட்டு கணவர் டார்ச்சர் செய்து அவமானப்படுத்தியால் மனம் உடைந்து தாய், மகள் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. தாய், மகளை காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.