ஒரே வீட்டில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரழப்பு..!!

மேற்குவங்க மாநிலம், மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நகரமான துர்காபூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் அமித் மொந்தல் (37). இவரது மனைவி ரூபா (33). இந்த தம்பவதிக்கு நிமித் (7) என்ற மகனும், ஒன்றரை வயது மகளும் இருந்தனர். நேற்று முன்தினம் நீண்ட நேரமாகியும் அமித் குடும்பத்தை சேர்ந்த யாரும் வீட்டை விட்டு வெளியே யாரும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில், அமித் மொந்தல், அருகில் மெத்தையில் ரூபா, நிமித் மற்றும் பெண் குழந்தை உயிரிழந்து கிடந்தனர். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அமித் மொந்தல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். அத்துடன் அங்கிருந்த அமித் மொந்தலின் செல்போனை போலீஸார் கைப்பற்றினர். ஆனால், சொத்துக்காக அமித் மொந்தல் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அமித்தின் மனைவி ரூபாவின் உறவினர் சுதிப்தா கோஷ் கூறுகையில், “அமித் மொந்தலுக்கும், அவரது தாய் வழிக்குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களுக்கும் சொத்து தகராறு இருந்தது. திட்டமிட்டு அவர்களால் நடத்தப்பட்ட கொலைகள் தான் இவை. அமித்தின் தாய் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை விட தனது சகோதரருக்கு முன்னுரிமை அளித்தார். இதனால் எனது மைத்துனரின் (அமித் மொந்தல்) சொத்தை அடைய இக்கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. அமித் மொந்தல் வீட்டில் இருந்த சிசிடிவி கேமிரா பாலித்தீன் கவரால் மூடப்பட்டிருந்தது. அத்துடன் வீட்டிற்கு வெளியே உள்ள கேமிராவும் செயல்படவில்லை. எனவே, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் இவை” என்று குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அமித் மொந்தலின் தந்தை நரேஷ்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் பெரும் சொத்துக்களை தனது மகன், மனைவிக்கு விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அமித்தின் தாய் தனது சகோதரருக்கு சொத்து வேண்டும் என்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே, சொத்துக்காக நடந்த கொலைகளா அல்லது உறவினர்களின் நெருக்கடியில் நடந்த தற்கொலைகளா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் துர்காபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.