உலக நாடுகளுக்கு வழிகாட்டும் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்கட்டமைப்பு ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளது. அப்படி இருந்தும், இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. எப்படி இது சாத்தியமானது?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் மிக முக்கியமான காரணம், டிஜிட்டல் கட்டமைப்பு. வளர்ந்த நாடுகளைவிடவும் மேம்பட்ட நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளது. உள்கட்டமைப்பு வசதியில் உள்ள போதாமையை இந்தியா அதன் டிஜிட்டல் கட்டமைப்புவழியே நிரப்புகிறது.

டிஜிட்டல் கட்டமைப்பு என்று எதைச் சொல்கிறோம்? பணப் பரிவர்த்தனை தொடங்கி அரசு சேவைகள், மருத்துவம் ,கல்வி என பல தளங்களும் டிஜிட்டல் மயமாகி இருப்பதை டிஜிட்டல் கட்டமைப்பு என்கிறோம். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் உருவாகி வந்த தொழில்வாய்ப்புகள், வேலைவாய்ப்புகளுக்கு இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பே அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பயணம், ஆதார் வழியாக தொடங்கியது என்று சொன்னால், அது மிகையல்ல. இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்த அடையாளம் எண் வழங்கும் நோக்கில் ஆதார் திட்டம் 2009-ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆதார் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 140 கோடிக்கு மேல் மக்கள் தொகைகொண்ட ஒரு நாட்டில் குடிமக்களைப் பற்றிய விவரங்களை தனித்த அடையாள எண்ணின் கீழ் டிஜிட்டல்மயப்படுத்தியது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆதார் வழியாக இந்தியா பல துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கத்தை கொண்டுவரத் தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு, நாட்டின் மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கை ஏற்படுத்தித் தரும் நோக்கில் ஜன்தன் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுவரையில் மக்களுக்கான மானியங்கள் கையில் பணமாக வழங்கப்பட்டு வந்தது. அது மோசடிக்கு வழிவகுத்திருந்தது. இடைத்தரகர்கள் புகுந்து மானியத்தொகையில் ஊழல் செய்தனர். இதனால், மக்களுக்கு மானியத் தொகை முழுமையாக சென்று சேராமல் இருந்தது. ஜன்தன் யோஜனா திட்டத்துக்குப் பிறகு, வங்கிக் கணக்கு இல்லாத குடிமக்களுக்கு வங்கிக் கணக்கு திறக்கப்பட்ட நிலையில், மானியத் தொகை நேரடியாகவே மக்களின் வங்கிக் கணக்குக்கே அனுப்பப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் இந்த முன்னெடுப்பு பெரும் கவனம் பெற்றது. இதை தொடர்ந்து அறிமுக மான யுபிஐ சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இன்று இந்தியாவின் பணப்பரிவர்த்தனையில் மாபெரும் புரட்சியை யுபிஐ நிகழ்த்தி இருக்கிறது. நேரடி பணப்பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான அதேசமயம் மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பணப் பரிவர்த்தனை அமைப்பை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்று 2012-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. ஆதார் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அதே போன்ற கட்டமைப்பு பணப்பரிவர்த்தனை முறைக்கும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, யுபிஐ 2016-ம் ஆண்டு அறிமுகமானது.

பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக் கடை வரையில் யுபிஐ முதன்மையான பரிவர்த்தனை தளமாக மாறியுள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவில் யுபிஐ மூலம் 7,400 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.126 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்படுள்ளது. மிக விரைவிலேயே இந்தியாவில் ரூபாய் பரிவர்த்தனையைவிட டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் யுபிஐ உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றன. பல நாடுகள் தங்கள் நாட்டிலும் யுபிஐ போல் பணப்பரிவர்த்தனை நடைமுறையைக் கொண்டு வர இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்களின் ஒன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பெருக்கம். 2016-இல் இந்தியாவில் 471 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன. தற்போது 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பார்க்கப்படுகின்றன.

ஸ்மார்ட் போன் பயன்பாடும் குறைந்த விலையில் இணைய வசதி ஆகிய இரண்டும் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.

2016-ம் ஆண்டு தொலைத் தொடர்புச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ கால்பதித்தது. அதுவரையில் 1ஜிபி இணையசேவைக்கு ரூ.250 வரையில் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு இணைய கட்டணம் 95 சதவீதம் குறைந்தது. இதனால், ஸ்மார்ட் போனில் இணைய வசதியை பயன்படுத்துபவர் களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. 2014-ல் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 25 கோடியாக இருந்தது. தற்போது அது 85 கோடியாக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்குப் பிறகு இந்தியாவின் டிஜிட்டல் பயணம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. தற்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில், உலக அரங்கில் இந்தியா தன் டிஜிட்டல் கட்டமைப்பு வழியாக தனிக்கவனம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.