மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனிப் பெருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா.

திருப்பரங்குன்றம் முருகன்

ஆண்டுதோறும் 15 நாள்கள் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சந்நிதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு முருகப் பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாகத் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்ப்பைப் புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருவிழா கொடியேற்றம்

தொடர்ந்து பங்குனி விழாவினை முன்னிட்டு முருகன், தெய்வானையோடு தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்கக் குதிரை, அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில் வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ம் தேதி கை பார நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து 5-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழாவும்பௌர்ணமி சிறப்பு பூஜையும், 6 -ம் தேதி இரவு சூரசம்ஹார லீலை, 7-ம் தேதி இரவு முருகப்பெருமானுக்குப் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் தேதி மீனாட்சியம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

திருப்பரங்குன்றம் முருகன்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெறும். இதற்காகக் காலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி கிரி வீதி வழியாகச் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.