நீலகிரி கோடை விழா: எந்தெந்த தேதிகளில் என்னென்ன கண்காட்சிகள்? முழு விவரம் இதோ!

ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை கண்டு ரசித்துச் செல்லும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக நீலகிரி விளங்கி வருகிறது. கொதிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்கக் குளுகுளு ஊட்டிக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க, மே மாதம் முழுவதுமே நீலகிரியில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

ஆலோசனை கூட்டம்

தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்படும் இந்தக் கோடை விழாக்களில் பங்கேற்க உலகின் பல நாடுகளிலிருந்தும் பயணிகள் வருவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான கோடை விழா தேதிகளை அறிவிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப்பின் தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், “நடப்பு ஆண்டுக்கான நீலகிரி கோடை விழா வருகின்ற மே மாதம் 6-ம் தேதி கோத்தகிரியில் 12-வது காய்கறிக் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 06-05-2023 மற்றும் 07-05-2023 ஆகிய இரண்டு நாள்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறிக் கண்காட்சி நடத்தப்படும்.

12-05-2023 முதல் 16-05-2023 வரை கூடலூரில் 10-வது வாசனைத் திரவியப் பொருள்கள் கண்காட்சி நடத்தப்படும்.

அரசு தாவரவியல் பூங்கா

13-05-2023 முதல் 15-05-2023 வரை ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடைபெற இருக்கிறது. 19-05-2023 முதல் 23-05-2023 வரை ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

27-05-2023 மற்றும் 28-05-2023 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக் கண்காட்சி நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும். சுற்றுலாப் பயணிகள், இந்தக் கோடை விழாக்களைக் கண்டு ரசிக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.