லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம் ரத்து; ராகுல் காந்திக்கும் சூப்பர் வாய்ப்பு!

காங்கிரஸ்
எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் பதவி தகுதிநீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரம் முக்கியமான விஷயமாக அமைந்தது. அப்போது, தவறு செய்பவர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

அவதூறு வழக்கு

இதனை எதிர்த்து பாஜக பிரமுகர் தொடுத்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டு வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் லட்சத்தீவு மக்களவை தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலின் வழக்கு முன்னுதாரணமாக பார்க்கப்பட்டது.

முகமது பைசல் விவகாரம்

இந்த வழக்கை பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அப்போதைய மத்திய அமைச்சர் சயீத் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முகமது பைசல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

எம்.பி பதவி தகுதி நீக்கம்

அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உடனடியாக முகமது பைசலின் எம்.பி பதவி தகுதி நீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. ஆனால் அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கு மேல்முறையீடு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

மக்களவை செயலகம் அறிவிப்பு

அதில் 10 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமின்றி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற உத்தரவையும் பெற்றார். இந்நிலையில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதாவது, லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி முகமது பைசலின் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்படுகிறது.

ராகுல் காந்திக்கும் வாய்ப்பு

இதனால் மீண்டும் எம்.பியாக தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கான சலுகைகளும் தொடரும். இதேபோன்ற வாய்ப்பு ராகுல் காந்திக்கு இருக்கிறது. சூரத் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை பெறலாம். அப்படி செய்தால் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு மீண்டும் எம்.பி பதவியை ராகுல் காந்தி பெற முடியும்.

ஆனால் இதுவரை ராகுல் காந்தி தரப்பிலோ, காங்கிரஸ் கட்சி தரப்பிலோ மேல்முறையீட்டிற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. ஒருவேளை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக இந்த விஷயத்தை பயன்படுத்துகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.

சூரத் நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி ராகுல் காந்திக்கு ஜாமீன் அளித்துள்ளது. அதற்குள் தீவிர ஆலோசனை நடத்தி ராகுல் காந்தி அடுத்தகட்ட நகர்வை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.