வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

*அரசே கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : விலை வீழ்ச்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த தென்னை விவசாயிகள் கவலையில் உள்ளனர். அரசே கூடுதல் விலை நிர்ணயம் செய்து தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு, கான்சாபுரம், புதுப்பட்டி, பிளவக்கல் அணை, சேதுநாராயணபுரம், நெடுங்குளம். தாணிப்பாறை அடிவாரம் மந்தித்தோப்பு, மகாராஜபுரம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 7500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் தங்களது கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்று தென்னை விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தற்போது விளைச்சல் நன்றாக உள்ள நிலையில் தேங்காய் விலை ரூ.7 என விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மிகவும் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் 100 காய்களுக்கு 15 காய்கள் விலையில்லாமல் லாபக்காய்கள் என வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டும். இதில் தென்னை மரங்களுக்கு உரங்கள் மற்றும் ஆண்டுக்கு 4 முறை லேசான உழவு, பராமரிப்பதற்கு வேலையாட்கள் என செலவுகளை சமாளிக்க முடியவில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

மேலும் காண்டாமிருக வண்டு தாக்குதல். வெள்ளைச்சுருள் ஈ தாக்குதல் ஆகிய நோய்களால் தேங்காய் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய்கள், பூச்சி தாக்குதல்களை தடுக்க தோட்டக்கலைத் துறையினர் மானிய விலையில் இடுபொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் அரசு வேளாண் பட்ஜெட்டில் தென்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை அறிவித்துள்ளது.

இருப்பினும் தேங்காய் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். நெல்லை அரசு கொள்முதல் செய்வது போல் தேங்காயையும் அரசே லாபக்காய் இல்லாமல் கூடுதல் விலைக்கு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வத்திராயிருப்பு பகுதியில் தேங்காய் எண்ணைய் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘ஒரு வடை 10 ரூபாய், ஒரு டீ 12 ரூபாய் என விலைவாசி அதிகரித்து வருகிறது. ஆனால் தேங்காய் மட்டும் எங்களிடம் இருந்து 7 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். வியாபாரிகள் என்ற போர்வையில் இடைத்தரகர்கள் இதில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதற்கு அரசு கொள்முதல் நிலையம் அமைப்பதே ஒரே தீர்வு’’ என்றனர்.

காண்டாமிருக வண்டு தாக்குதலை தடுக்க….

தென்னை மரத்தில் காண்டா மிருக வண்டு தாக்குதலை தடுக்க, மரத்தில் வாளியைக் கட்டி அதில் இனக்கவர்ச்சி பொறி ஒன்றை வைத்து, பாதியளவு மண்ணெண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். வாளியின் மேல்பகுதியில் பக்கவாட்டில் துளைகள் போட்டு வைக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறியால் ஈர்க்கப்பட்டு வரும் காண்டாமிருக வண்டுகள், அந்த துளைகள் வழியாக வாளிக்குள் சென்று விடும். வாளியில் பாதியளவு மண்ணெண்ணெய் உள்ளதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காண்டாமிருக வண்டுகள் இறந்து விடும் என தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.