அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு… இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்

விழுப்புரம்: அரசிடம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த இளைஞரை, ‘மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம்  வச்சிருக்கியா நீ’, என்று பேசிய தாட்கோ பெண் அதிகாரியிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் கிராமத்தைச்  சேர்ந்த பட்டதாரி இளைஞரான சிவனேசன், மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி  கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன், விழுப்புரம் மாவட்ட தாட்கோ  அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணல் அண்மையில்  நடைபெற்றது.  இதற்காக  அவர் தனது நிலத்தில் மாட்டு கொட்டகை  அமைத்து, 12 மாடுகள் வளர்ப்பதற்கு ரூ. 7 லட்சம் கடனுதவி கேட்டு  அதற்கான ஆவணங்களை கொடுத்து இருந்தார்.

இந்நிலையில் சிவனேசன், தாட்கோ  அலுவலகத்துக்குச் சென்று, மாவட்ட மேலாளர் மணிமேகலையை நேரில் சந்தித்து,  கடன் கேட்டுள்ளார். அப்போது, ‘மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம்  வச்சிருக்கியா நீ’, என்று ஏளனமாகப் பேசி இருக்கிறார். மேலும், வங்கியில்  கணக்கு வைத்திருந்தால் போதுமா? டெபாசிட் தொகை இருக்க வேண்டும் என ஒருமையில் அவன், இவன் என பேசியிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ  இணையத்தில்  வைரலாகியுள்ளது.  இதையடுத்து கலெக்டர் பழனி, தாட்கோ மாவட்ட  மேலாளர் மணிமேகலையிடம் நேற்று விளக்கம் கேட்டுள்ளார். அப்போது மணிமேகலை, ‘சிவனேசனின்  விண்ணப்பம் கடன் அளிக்க பரிந்துரை செய்யும் அளவுக்கு தகுதியானதாக இல்லை.  30 நிமிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில்  தனக்கு சாதகமானதை மட்டும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்’ என விளக்கம்  அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து கலெக்டர் பழனி கூறுகையில், ‘விசாரணை அறிக்கை தாட்கோ மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பி  வைக்கப்படும்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.