கர்நாடகாவில் ட்ரெண்டாகும் மு.க.ஸ்டாலின்.. பக்காவாக ஸ்கோர் செய்த முதல்வர்!

MK Stalin : தயிரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியதை தொடர்ந்து கர்நாடக வட்டாரங்களில் தமிழ்நாடு முதல்வர்

ட்ரெண்டாகி வருகிறார்.

தமிழ்நாட்டில் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தயிர் என்பதை இந்தியில் ‘தஹி’ என குறிப்பிட வேண்டும் எனவும், அருகே பிராக்கெட்டில் தமிழில் தயிர் என குறிப்பிட வேண்டும் எனாவும் மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு ஆணையமான FSSAI அறிவுறுத்தியுள்ளது.

இதேபோல கர்நாடகாவிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமான நந்தினி உற்பத்தி செய்யும் தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ என இந்தி வார்த்தையை குறிப்பிட வேண்டும் எனவும், அருகே பிராக்கெட்டில் கன்னடத்தில் தயிர் என்பதை குறிப்பிடலாம் எனவும் FSSAI அறிவுறுத்தியுள்ளது.

தயிர் பாக்கெட்டிலும் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நந்தினி தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்புக்கு கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், தயிர் பாக்கெட்டுகளில் தஹி என அச்சிடமாட்டோம் எனவும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தலைவர்களும் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கின்றனர். இந்த சூழலில், தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்புக்கு கர்நாடக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.

இந்த சூழலில், நந்தினி மற்றும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி திணிப்பு விவகரத்தை குறிப்பிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று காட்டமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவு கர்நாடக சமூக வலைதள வட்டாரங்களில் வைரலாக பரவி ட்ரெண்டாகி வருகிறது. அண்டை மாநிலமான தமிழகத்தில் இருப்பது போல கர்நாடகத்திலும் பலமான எதிர்ப்பு இருக்க வேண்டும் என கன்னட மொழி ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கர்நாடகத்தை சேர்ந்த நெட்டிசன்கள் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.