ரூ 40 கோடி சுருட்டிய காவலர் குடும்பம்.. தவிக்கும் காவலர்கள்..! போலீசிடமே சுருட்டலா..?

காஞ்சிபுரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தைப் போல அதிக வட்டி தருவதாக கூறி நிதிதிரட்டி 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, இரு காவலர்கள் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஆருத்ரா பாணியில் சொந்தமாக அதிக வட்டி தரும் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பல்வேறு தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு வட்டியாக தருவதாக கதை அளந்த சகாய பாரத், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் 20 சதவீதம் வரை மாதம் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 40 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்ததாக கூறப்படுகின்றது.

இவரது பேச்சை நம்பி ஏராளமான போலீசாரும், கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் வங்கியில் காசோலையை மாற்ற இயலவில்லை என்றும், ஆர்.பி.ஐ கண்காணிப்பதாகவும், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும் கூறி வட்டி விகிதத்தை 10 சதவீதமாக மாற்றிய சகாய பாரத் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் பணத்தை வெளியே எடுக்க இயலவில்லை என்று கூறி மொத்த பணத்தையும் சுருட்டியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களில் காவலர் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொது மக்களும் அதிகமாக இருப்பது தெரியவந்ததால். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் காவலர் சகாய பாரத் அவரது மனைவி சௌமியா, காஞ்சியில் போக்குவரத்து காவலராக பணி புரிந்து வரும் சகோதரர் ஆரோக்கிய அருண், காவல் பணியில் இருந்து பள்ளிக் கல்வி பணியில் சேர்ந்த மற்றொரு சகோதரரான இருதயராஜ், இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மெகா மோசடியை அரங்கேற்றியதை கண்டு பிடித்தனர். இவர்கள் 8 பேரையும் போலீசார் மொத்தமாக கைது செய்தனர்.

இந்த மோசடி வழக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்று தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறினால் பொதுமக்கள் நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே ஐ.எஃப்.எஸ்., ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து காஞ்சிபுரம் மக்கள் பலர் தங்கள் பணத்தை இழந்து தவிக்கும் நிலையில் தற்போது காவலர் குடும்பத்தை நம்பி பல காவலர் குடும்பங்களே பணத்தை இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறுக்குவழியில் பணக்காரராக ஆசைப்பட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு மற்றும் ஒரு சாட்சியாக மாறியிருக்கின்றது இந்த மெகா மோசடி சம்பவம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.