விவசாயிகள் மனம் வைத்தால் போதும்… 242 கோடி மரங்கள் நடலாம் – காவேரி கூக்குரல் இயக்கம்!

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் கோயம்புத்தூர் கட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் சங்கம் (சிபாகா) சார்பில் ‘பசுமை தொண்டாமுத்துர்’ திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியின் நிறைவு விழா கோவையில் இன்று (ஏப். 2) நடைபெற்றது.

மகத்தான காரியம்

போத்தனூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், ஒரு லட்சமாவது மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,”சத்குரு செய்வது ஒரு மகத்தான காரியம். அதில் சிபாகாவும் பங்கெடுத்துள்ளது. என்னை பொறுத்தவரை, மரம் நடுவதால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் உருவாகிவிட்டது. எனவே, விழிப்புணர்வை தாண்டி அதை செயல்படுவதற்கான பொறுப்புணர்வையும், வைராக்கியத்தையும் வளர்க்க வேண்டிய தருணம் இது” என்றார். 

இந்தியாவின் ஆன்மா

இந்நிகழ்ச்சியில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், “மகாத்மா காந்தி, இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என கூறினார். அதுமட்டுமின்றி, அவர் தன் வாழ்நாளில் கிராம சுய ராஜ்ஜியம் குறித்து அதிகம் பேசியுள்ளார். கிராமங்களை முன்னேற்றினால் தான் நாட்டை முன்னேற்ற முடியும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதை நினைவும் கூறும் வகையில் ஒரு லட்சமாவது மரம் நடும் விழா இங்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்தியாவில் சுமார் 60  சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து உள்ளனர். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியாது. விவசாயிகளின் பொருளாதாரம் மட்டுமின்றி, கிராமத்தின் சுற்றுச்சூழல், ஆரோக்கியம், மண் வளம், நீர் வளம் என அனைத்தையும் ஒருங்கிணைந்து முன்னேற்றுவதற்கு மரம்சார்ந்த விவசாய முறை ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் பொருளாதாரம் 3 முதல் 8 மடங்கு வரை அதிகரித்து இருப்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக பார்த்துள்ளோம்.

242 கோடி மரக்கன்றுகள்

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. அதில் 30 லட்சம் ஹெக்டர் நிலங்கள் தரிசு நிலங்களாக உள்ளது. ஒரு விவசாயி 50 முதல் 100 மரங்களை தன்னுடைய நிலங்களின் வரப்போரங்களில் நட்டாலே சுமார் 1000 கோடி மரங்கள் நடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 242 கோடி மரங்கள் நடுவது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை” என்றார்.

இதேபோல், மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில்,”காவேரி கூக்குரல் இயக்கமானது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவது என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. ‘பசுமை தொண்டாமுத்தூர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகித்து நட வைத்தோம்.  

அதை தொடர்ந்து இப்போது சிபாகாவின் உதவிடன் 2ஆவது ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அடுத்து இன்னும் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகளை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்துடன் இணைந்து செய்து வருகிறோம். இவ்வாறு பல்வேறு சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்தால் 242 கோடி மரங்கள் நடும் பணியை மிக விரைவில் எளிதாக முடித்துவிடலாம்” என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அறிவியல் மேதை ஜி.டி.நாயுடுவின் பேரனும், ஜி.டி வெல்லர் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான ராஜ்குமார் பேசுகையில்,”பொதுவாக வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது. பெங்களுரு போன்ற பெரு நகரங்கள் கான்கிரீட் காடுகளாக மாறி உள்ளன. இந்நிலையில், கோயம்புத்தூர் கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இந்நிகழ்ச்சியில் சிபாகா நிர்வாகிகள், கோவை ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.