மேற்கு நாடுகளின் கெட்ட பழக்கம் என கூறிய மத்திய மந்திரி ஜெய்சங்கர்; சற்று கூலாக இருக்கும்படி கூறிய சசி தரூர்

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் இளம் வாக்காளர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இளம் வாக்காளர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அவர் வாக்காளர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது அவரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மேற்கத்திய நாடுகள், பிற நாடுகளின் உள்விவகாரங்களை பற்றி விமர்சிப்பது கடவுள் அளித்த உரிமை என நினைக்கின்றன என கூறினார்.

இதேபோன்று, நமது நாட்டில் நடக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க வெளிநாடுகளுக்கு நாமாக சென்று அழைப்பு விட கூடாது என்றும் கூறினார். அதனால் பாதி பிரச்சனை அவர்களிடமும், பாதி பிரச்சனை நம்மிடமும் உள்ளது. இரு தரப்பிலுமே பிரச்சனை சரி செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. சசி தரூரிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், விமர்சனங்களை கண்டு பொங்குபவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாக, ஏதேனும் முன்னேற்றத்திற்கான விசயங்களை நாம் எடுத்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம் என நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், ஒவ்வொரு கருத்துக்கும் நாம் எதிர்வினையாற்றி கொண்டிருக்க கூடாது. அப்படி செய்தோம் என்றால், நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டிருக்கிறோம் என்றாகி விடும். அதனால், சற்று கூலாக இருக்கும்படி ஜெய்சங்கரை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.