புதிய முதலீட்டாளர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்..!

முடிந்த 2022-23 நிதி ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக 2.5 கோடி டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக முதலீட்டை ஆரம்பித்திருக்கும் பலர் யாருடைய வழிகாட்டலும் இல்லாமல் சுயமாக பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலீடு பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியாததால் பல்வேறு தவறுகளை செய்து வருகிறார்கள். கட்டாயம் தவிர்க்க வேண்டிய பத்து முக்கியமான முதலீட்டுத் தவறுகளை இங்கே பார்ப்போம்.

மணி மேனேஜ்மென்ட்! – 20 – பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா?

1) நோக்கம் எதுவும் இல்லாமல் முதலீடு செய்வது..!

பலரும் நோக்கம் எதுவும் இல்லாமல் முதலீட்டை ஆரம்பித்து விடுகிறார்கள். அது வங்கியில் பணம் போடுவதாகட்டும் மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதாகட்டும் எதுவாக இருந்தாலும் சில காலம் மேற்கொண்டுவிட்டு நிறுத்தி விடுகிறார்கள். மேலும், அந்தப் பணத்தை எடுத்து தேவையில்லாமல் செலவு செய்து வீணாக்கியும் விடுகிறார்கள்.

 இதற்கு பதில், எந்த முதலீடாக இருந்தாலும், அதனை ஓர் இலக்குடன் இணைத்து மேற்கொள்ளும் போது அந்த இலக்குக்கு பணம் சேரும் வரைக்கும் முதலீடு தொடரும். மேலும், அந்தப் பணத்தை எடுத்து கண்டதுக்கும் செலவு செய்ய மாட்டார்கள்.

2)  வருமான வரியை கணக்கில் எடுக்காதது…! 

பலரும் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானம் முழுமையாக கைக்கு கிடைத்துவிடும் என முதலீடு செய்து வருகிறார்கள். உதாரணத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட் ஒன்றுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். வட்டி வருமானத்துக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வருமான வரிக் கட்ட வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

வருமான வரி

உதாரணத்துக்கு 8% வட்டி வருமானம் பெறும் முதலீட்டாளர் 30% வருமான வரி வரம்பில் வந்தால் அவருக்கு வரி போக 5.6%தான் வருமானம் கிடைக்கும். இதுவே, 5%,10%, 20% வரி வரம்பில் வந்தால் ஒருவர் முறையை 7.6%, 7.2% மற்றும் 6.4% தான் வருமான வரி போக வருமானம் கிடைக்கும். அந்த வகையில், முதலீட்டு லாபத்தில் வருமான வரியாக எவ்வளவு செல்லும் என்பதை கவனித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்களை விட நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் குறைவான வரிக் கட்ட வேண்டி வரும்.

3)  பணவீக்க விகிதத்தை விட  குறைவான வருமானம்…!

முதலீட்டில் போட்ட பணம் எப்போதும் குறையக் கூடாது என்கிற பாதுகாப்பு கருதி பலரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் மொத்தப் பணத்தையும் போட்டு விடுகிறார்கள். எஃப்டிக்கு 7% வருமானம் கிடைக்கும் நிலையில் பணவீக்க விகிதம் 6% ஆக இருந்தால் முதலீடு லாபகரமாக இருக்காது. அந்த வகையில் நீண்ட கால நிதி இலக்குகளை நிறைவேற்ற பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் மற்றும் குறைவான வருமான வரிக் கட்டும் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்துவது லாபகரமாக இருக்கும்.

பணவீக்கம்

நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீட்டை ஓராண்டுக்குள் விற்கும் பட்சத்தில் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 15% வரிக் கட்டினால் போதும். இதுவே ஓராண்டுக்கு மேற்பட்டு விற்று லாபம் பார்க்கும் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரிக் கட்டினால் போதும்.

4)  ரிஸ்க் இல்லாத முதலீடு..!

பெரும்பாலோர் ரிஸ்க் இல்லாத முதலீடு என நினைத்து வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் மொத்தப் பணத்தையும் போட்டு வருகிறார்கள். வங்கி திவாலாகும் பட்சத்தில் வட்டியுடன் சேர்ந்து ரூ.5 லட்சம் வரைக்கும்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் பாதுகாப்பு இருக்கிறது. தபால் அலுவலக முதலீடுகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையில் வட்டி மாற்றத்துக்கு உள்ளாகிறது. அந்த வகையில், இன்றைய தேதியில் வருமான ரிஸ்க் இல்லாத முதலீடு என்று எதுவும் இல்லை.

குறைவான ரிஸ்க் கொண்ட முதலீடு!

ஆனால், பலர் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என ஆசை காட்டும் மாயவலையில் சிக்கி பணத்தை போட்டு விடுகிறார்கள். இது போன்ற ஏமாற்று பொன்ஸி திட்டங்களில் ஒட்டு மொத்தமாக பணத்தை ஏமாற்றி விட்டு போவதுதான் அதிகம் நடக்கிறது.

 அந்த வகையில் ஆர்.பி.ஐ, செபி போன்ற அமைப்புகளின் ஒழுங்குமுறைக்கு கீழ் வரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதுதான் எப்போதும் பாதுகாப்பானது.

5)  முதலீட்டை எளிதில் பணமாக்குவது..!

எந்த ஒரு முதலீடும் எளிதில் விரைவாக பணமாக்க கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒருவர் எளிதில் பணமாக்க முடியாத மனை, வீடு போன்ற ரியல் எஸ்டேட் முதலீட்டில் மொத்த பணத்தையும் போடக் கூடாது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றால் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் யூனிட்டை விற்ற இரு தினங்களில் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேர்ந்துவிடும். லிக்விட் ஃபண்ட் என்றால் அடுத்த பணி நாளில் பணம் கைக்கு கிடைத்துவிடும்.

பங்குச் சந்தையில் உங்கள் பணமா? தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்! 

6)  நீண்ட கால முதலீடு..!

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் இருக்கிறது. நீண்ட காலத்தில்தான் அதிக லாபம் பார்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துகொண்டால் முதலீடு செய்து ஆறு மாதத்துக்குள் பணத்தை எடுப்பவர்களின் சதவிகிதம் 38% ஆக உள்ளது. ஓராண்டுக்குள் பணத்தை எடுப்பவர்கள் 19% பேராகவும் ஓராண்டுக்கு மேற்பட்டு மூன்றாண்டுக்குள் எடுப்பவர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதமாக உள்ளது. மீதி 22 சதவிகித முதலீட்டாளர்கள்தான் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டை தொடர்பவர்களாக இருக்கிறார்கள்.

 ஐந்தாண்டுக்கு மேல் முதலீட்டை வைத்திருப்பவர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்டிங் பலனை பெற முதலீட்டை நீண்ட காலத்துக்கு தொடர்வது மிக முக்கியமாகும்.

7)  நேரடி முதலீடு..!

பலரும் இப்போது சுமார் 0.5-1 சதவிகித கூடுதல் லாபத்துக்கு ஆசைப்பட்டு மியூச்சுவல் ஃபண்டில் விநியோகஸ்தர் மூலம் ரெகுலர் பிளானில் முதலீடு செய்யாமல் அவர்களே டைரக்ட் பிளானில் பணத்தை போட்டு வருகிறார்கள்.

இப்படி முதலீடு செய்பவர்கள் அவர்கள் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் நிதி நிபுணர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒரு நிதி நிபுணர் மூலமாக முதலீடு செய்யும் போதுதான், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் சந்தை இறங்கும் போது எப்படி செயல்பட வேண்டும்; பங்குச் சந்தை ஏற்றத்திலிருக்கும் போது எப்படி செயல்பட வேண்டும் என்பது சரியாக தெரியும்.

நேரடியாக முதலீடு செய்பவர்களில் பெரும்பாலோர் கூகுளில் தகவல்களை தேடி முதலீடு செய்கிறார்கள். கூகுள் ஒரு சிறந்த தேடி பொறிதான், அது சிறந்த நிதி நிபுணர் அல்ல என்பது அந்த முதலீட்டில் நஷ்டப்படும் போதுதான் புரிய வருகிறது. எனவே, எப்போதும் ஒரு நிதி நிபுணரின் உதவியுடன் முதலீடு செய்வதுதான் லாபகரமாக இருக்கும்.

ட்விட்டர் சர்வே: எஸ்.ஐ.பி முதலீட்டை என்ன செய்தீர்கள்?

8. எஸ்.ஐ.பி முதலீட்டை இடையில் நிறுத்துதல்..!

ஈக்விட்டி ஃபண்ட்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் பலரும் புதிதாக முதலீடு செய்து வருகிறார்கள். இவர்கள் பங்குச் சந்தையின் திடீர் இறக்கத்தால் யூனிட்களின் என்.ஏ.வி மதிப்பு குறைந்து முதலீட்டின் மொத்த மதிப்பு குறையும் போது, இழப்பு இன்னும் அதிகமாகி விடுமோ என்கிற பயத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி விடுகிறார்கள்.

உண்மையை சொல்லப் போனால், பங்குச் சந்தை இறக்கத்தின் போது யூனிட்கள் குறைவான விலையில் கிடைக்கும்; அப்போதுதான் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது பின்னர் பங்குச் சந்தை ஏற்றம் காணும்போது அதிக லாபம் கிடைக்கும். எனவே, எக்காரணமும் கொண்டும் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்த கூடாது. இந்தியப் பங்குச் சந்தையை பொறுத்த வரையில் இது வரைக்கும் தொடர்ந்து ஏற்றத்திலோ, தொடர்ந்து இறக்கத்திலோ எப்போதும் இருந்தது இல்லை.

9. ஓய்வுக் கால திட்டமிடல்..!

சொந்த வீடு, சொந்த கார், பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் என பல்வேறு நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்பவர்கள் ஏனோ, தங்கள் பணி ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். இது மிகப் பெரிய முதலீட்டுத் தவறாகும்.

அனைத்து தேவைகளுக்கும் கடன் கிடைக்கும். ஆனால், ஓய்வுக் காலத் தேவைகளுக்கு மட்டும் கடன் கிடைக்காது. எனவே, ஓய்வுக் காலத்துக்கு என முதலீடு செய்வது மிக அவசியம். இளம் வயதில்  முதலீட்டை ஆரம்பித்தால் சிறிய தொகையை மாதந்தோறும் முதலீடு செய்து வந்தால் போதும்.

கட்டுரையாளர்: ஏ.ஜி.வி ஸ்ரீநாத் விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/

10. கடந்த கால வருமானத்தின் அடிப்படையில் முதலீடு..!

இது பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யும் தவறாகும். சில திட்டங்கள் திடீரென அதிக வருமானம் கொடுக்கும்; அதேபோன்ற திட்டங்களில் பல புதிய முதலீட்டாளர்கள் கண்ணை மூடிக் கொண்டு பணத்தை போட்டு விடுகிறார்கள். அப்படி செய்வது தவறாகும்.

 கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, கடந்த ஓராண்டு வருமானம் அடுத்து வரும் ஆண்டுகளில் தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

 ஒரு ஃபண்ட் கடந்த 3, 5,10 மற்றும் 15 ஆண்டுகளில் தொடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றால் அதன் அடிப்படையில் முதலீட்டுக்கு தேர்வு செய்யலாம். நீங்கள் முதலீட்டுக்கு புதியவர்கள் என்றால் மேலே குறிப்பிட்ட முக்கியமான 10 முதலீட்டுத் தவறுகளை தவிர்க்கவும். ஏற்கெனவே முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால் இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டால் முதலீட்டில் கூடுதல் நன்மை பெற முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.